
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தனர். ஆனால் அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என அவரது மகன் கண்ணீர் விட்டு அழுவதாக நேற்று சிம்பு கமிஷனரை சந்தித்து கூறியுள்ளார்.
ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது வரை சிறையில் இருப்பதால் அதற்காக நியாயம் கேட்டு கமிஷனர் அலுவலகம் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், “மனிதாபிமானம் கொண்ட, மண் வாசனை கொண்ட, மதச்சார்பற்ற, அரசியல் சார்பற்ற ஒரு தனிமனிதனை, தமிழ்க் கலைஞனை, அதாவது அண்ணன் மன்சூர் அலி கான் அவர்களை மனித உரிமை மற்றும் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி நாளை காலை போலீஸ் கமிஷனர் ஆஃபீஸ் சென்று மனு கொடுக்க இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து நேற்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார் சிம்பு. அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தச் சிம்பு, நான் இயக்குனர் மணிரத்தினத்தின் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்து வருவது உங்களுக்கு தெரியும். இப்படத்தில் என்னுடன் மன்சூர் அலிகான் அண்ணாக நடித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் தான் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அடிக்கடி வலியும் இருந்து வந்தது. சமீபத்தில் காவிரி விவகாரம் தொடர்பான அவர் போராட்டத்தில் ஈடுபடுவதை பார்த்தேன். வழக்கம் போல அனைவரையும் விடுதலை செய்தது போன்று, அவரை விடுதலை செய்துவிட்டார்கள் என்று தான் நினைத்தேன்.
சில நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவரது மகன் கைது செய்து 7 நாட்கள் ஆகி விட்டதாகவும், அப்பா உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தங்களுக்கு தெரியாது என கதறி அழுதுள்ளார்.
உடனே தான், ஏதாவது செய்ய வேண்டுமென என முடிவெடுத்து கமிஷனரை சந்திக்க வந்தேன். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும் எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.
இது பற்றி காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டேன். அவர்கள் தகுந்த விளக்கத்தை அளித்தனர். விரைவில் மன்சூர் அலிகான் விடுவிக்கப்படுவார். அவரை அவர் குடும்பத்தினர் சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றவர்களை விடுவித்த போது மன்சூர் அலிகானை மட்டும் விடுவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.