
என்னுடைய கனவு பிரதமர் ஆவது தானே தவிர குடியரசுத் தலைவராவது அல்ல என உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் எம்எல்ஏ யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நிலையில் இப்போதாவது மாயாவதிக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்படுகிறதா என பார்க்கலாம் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில் மாயாவதி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல் அமைச்சராகி உள்ளார். எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததே மீண்டும் பாஜக அங்கு வெற்றி பெற காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அதாவது சமாஜ்வாடி கட்சி பாஜகவை கடுமையாக எதிர்த்தது போல, பகுஜன்சமாஜ் எதிர்த்திருந்தால் பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது. ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
அக்கட்சியின் தலைவர் மாயாவதி பிரச்சாரத்திற்கு செல்ல வில்லை என்றே கூறலாம். பாஜகவுடன் மறைமுகமாக பகுஜன்சமாஜ் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலின் பின் வாங்கிவிட்டதாக காங்கிரஸ் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தன. மொத்தத்தில் சமாஜ்வாடி கட்சி 111 சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் பகுஜன் சமாஜ் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது, இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி மிஸ்ரா அக்காட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏ உமாசங்கர் சிங் ஆகியோர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில்தான் இது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இப்போதாவது பாஜக மாயாவதியை குடியரசுத் தலைவராக்க விரும்புகிறதா என்பதை பார்ப்போம் என மாயாவதியை விமர்சித்து பேசியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு, நான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பது என் கனவு அல்ல, பிரதமராக வேண்டும் என்பதுதான் என் கனவு, லட்சியம் என மாயாவதி பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் சமாஜ்வாடி, பாஜக அரசுகளால் புறக்கணிக்கப்பட்டன. எனவேதான் அரசின் கவனத்தை ஈர்க்கவே எஸ்.சி மிஸ்ரா தலைமையில் பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்துள்ளனர்.
மீண்டும் உத்தரவு பிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான வழி தெளிவாக உள்ள நிலையில், என்னை குடியரசுத் தலைவராக்கும் கனவை சமாஜ்வாடி கட்சி கைவிடவேண்டும் என அறிவித்துள்ளார். நான் எப்போதும் போராட்டத்தையே விரும்புகிறேன், நிம்மதியான வாழ்க்கையை அல்ல, அதனால் நான் குடியரசுத்தலைவராக விரும்பவில்லை. மீண்டும் உத்திர பிரதேசத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆகவே நான் கனவு காண்கிறேன் என கூறியுள்ளார்.