எல்லைக்கே போய் கர்நாடகத்தை அலறவிட்ட பிரேமலதா.. விஜய பிரபாகர் உள்ளிட்ட 349 தேமுதிகவினர் மீது வழக்கு.

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2021, 3:15 PM IST
Highlights

இரு மாநிலத்திற்கும் இடையே உள்ள சகோதரத்துவத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் உள்ளது எனவும், தனது பிடிவாதப் போக்கை கர்நாடக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தேவையில்லாமல் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு கர்நாடகம் ஆளாக நேரிடும் என அப்போது அவர் கர்நாடகத்தை எச்சரித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 349 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதற்காக மத்திய அரசுடன் அனுமதி கேட்டு தேவையான அலுவல் நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்துள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பட்சத்தில், தமிழகத்தின் நீர் ஆதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும் அபாயம் இருந்து வருவதால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜகவும் கர்நாடக அரசை கண்டித்து அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தேமுதிக கர்நாடக மாநில அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து, தமிழக மாநில எல்லை நகரான ஒசூரில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. அதேபோல கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்தி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி டிராக்டரை இயக்கி பிரேமலதா ஆர்பாட்டத்தில் பங்கேற்றது பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.

இரு மாநிலத்திற்கும் இடையே உள்ள சகோதரத்துவத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் உள்ளது எனவும், தனது பிடிவாதப் போக்கை கர்நாடக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தேவையில்லாமல் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு கர்நாடகம் ஆளாக நேரிடும் என அப்போது அவர் கர்நாடகத்தை எச்சரித்தார். இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அனுமதியின்றி ஒன்று கூடியது, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட 349 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர். இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

click me!