எடப்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி

By karthikeyan VFirst Published May 24, 2020, 7:07 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுவருவதாக பாராட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. இன்றுடன் ஐந்தாவது நாளாக தினமும் 700க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இன்று 765 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16277ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இறப்பு விகிதம் ஒரு சதவிகிதத்திற்குள் தான் உள்ளது. தமிழக அரசின் சிறப்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளால் தான் பாதிப்பு பெரியளவில் எகிறாமல் சீராக இருப்பதுடன், அதிகமானோர் குணமடைகின்றனர். 

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தினமும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு வந்து கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை ஆய்வுசெய்த மத்திய குழுவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் கூட, கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்வதாக பாராட்டின.

ஆனால் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கொரோனா தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்துவருவதுடன், திமுகவின் உந்துதலின் பெயரில்தான் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துவருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு ஆட்சியாளர்கள் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுவருகிறது. ஆனாலும் தினமும் ஸ்டாலின் விமர்சித்து கொண்டே இருக்கிறார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கொரோனா தடுப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஊரடங்கால் மக்கள் வருமானமில்லாமல் கஷ்டப்படும் இந்த நெருக்கடியான சூழலில் டாஸ்மாக்கை திறந்திருக்க தேவையில்லை. அந்த ஒரு விஷயத்தை தவிர மற்றபடி, தமிழக அரசின் செயல்பாடுகளில் எந்த குறையும் இல்லை. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது என்று பாராட்டு தெரிவித்தார். 

தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, எதிர்க்கட்சிகள் என்றாலே ஏதாவது குறை சொல்வது வழக்கம்தானே.. திமுக ஆட்சியில் இருந்தால்கூட, இதைவிட சிறப்பாக என்ன செய்திருக்கப்போகிறார்கள்? என்று கேள்வியெழுப்பிய பிரேமலதா, தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பானவை என்று தெரிவித்தார். 
 

click me!