
கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவா் பிரவீன் தொகாடியா, அகமதாபாத்தில் உள்ள பூங்கா ஒன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருப்பவர் பிரவீன் தொகாடியா. இவா் மீது ஏற்கனவே உள்ள கொலை வழக்கு ஒன்று தொடா்பாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தான் காவல்துறையினா் அகமதாபாத் வந்திருந்தனா்.
அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தான் காவல்துறையினரும், குஜராத் காவல்துறையினரும் அவரது அலுவலகத்திற்கு சென்றனா்.
ஆனால் அவா் அங்கு இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் தொகாடியா வீட்டிலும் இல்லை. இதனால் போலீசார் திரும்பி சென்றனர். இதையடுத்து காணாமல் போன தொக்காடியாவை தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதே நேரத்தில் தொக்காடியாவை போலீசார் கைது செய்துவிட்டனர் என வதந்தி பரவியதால் அவரது ஆதரவாளர்கள் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உடனடியாக அவரை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கிழக்கு அகமதாபாத் நகரில் கோடார்பூர் பகுதி அருகே பூங்கா ஒன்றில் தொகாடியா மயக்கமடைந்த நிலையில் தொக்காடியா மீட்கப்பட்டார். அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
குறைந்த சர்க்கரை அளவால் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார். அவரது உடல் நிலை முழுவதும் சீரான பின் மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்