
பிரதமர் பதவிக்கு தன்னைவிடத் தகுதியானவர் பிரணாப் முகர்ஜி தான் என்றும் சோனியா காந்தி தன்னைப் பிரதமராகத் தேர்வு செய்தபோது, அவர் அதிருப்தி அடைவதற்கும் நியாயம் இருந்தது என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, கூட்டணி ஆட்சி ஆண்டுகள்: 1996-2012' என்ற தலைப்பில் தான் எழுதிய புதிய நூலை வெளியிட்டார்.
இந்த நூல் வெளியீட்டு விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , கடந்த 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, எதிர்பாராத விதமாக, பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னைத் தேர்வு செய்ததாக குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் பிரதமர் பதவிக்கு தன்னைவிடத் தகுதியானவர் பிரணாப் முகர்ஜி தான் என்றும், கட்சித் தலைமை தன்னைப் பிரதமராகத் தேர்வு செய்தபோது, அவர் அதிருப்தி அடைவதற்கும் நியாயம் இருந்தது என்றும் மன் மோகன் கூறினார்.
சுய விருப்பம் காரணமாக அரசியலுக்கு வந்தவர் பிரணாப் முகர்ஜி என்றும் ஆனால், தான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்று கூறிய மன் மோகன், . பி.வி.நரசிம்மராவ் கேட்டுக் கொண்டதன் பேரில் நிதியமைச்சராகி, அதன் மூலம் அரசியலுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.
தங்கள் இருவருக்கும் இடையே ஒரு மாபெரும் நல்லுறவு தொடர்கிறது என்றும் தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகிய இருவரும் தான் மிகவும் மதிப்பளிக்கும் மூத்த உறுப்பினர்கள் என்றும் கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி எவ்வித குழப்பமும் இல்லாமல் நடைபெற்றது என்றால், அந்தப் பாராட்டுகள் பிரணாப் முகர்ஜிக்கே சேரும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
..இந்த நிகழ்வில் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.