இந்தி படிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது நல்ல விசயத்தை படித்துக் கொள்கிறோம்.. தமிழகத்தோடு கைகோர்க்கும் கர்நாடகம்

By Thiraviaraj RMFirst Published Aug 22, 2020, 2:41 PM IST
Highlights

தமிழகத்தில் மட்டுமே இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், தற்போது, கர்நாடகாவிலும் அதே போன்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

இந்தி மொழி திணிப்பை தமிழகம்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக எதிர்த்தது. மற்ற மாநிலங்களுக்கு பெரிய அளவில், இதுபற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகா, இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது

.

கர்நாடகாவை ஆட்சி செய்யும் பாஜக, ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே தேசிய கட்சிகள். இருப்பினும், அந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அந்த கட்சிகள் இந்தி திணிப்பை எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவின் 3வது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வால் ரேவண்ணா, 3 மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.
 
’’இந்தியை கட்டாயமாக்குவது பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையில்லாத சுமை. இந்தி படிக்க செலவிடும் நேரத்தை, வாழ்க்கை கல்வி படிக்க செலவிடலாம். ஆங்கிலத்தை தகவல் தொடர்பு மொழியாக உலகமே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இந்தி தேவையற்றது’’என தெரிவித்துள்ளார். இந்த பிரஜ்வால் ரேவண்ணா,  கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமியின் சகோதரரான ரேவண்ணாவின் மகன் ஆவார். அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணாவின் இந்த கருத்து, இந்தி ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் எழுப்பியே வருகிறார். இந்தி மட்டுமே, இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் மொழி என பாஜக முன்னாள் தலைவர் அமித்ஷா குறிப்பிட்ட நிலையில், எடியூரப்பாவோ, அதற்கு மாறான கருத்தை தெரிவித்தார். இந்தியாவின் அலுவல் மொழிகள் அனைத்தும் சமமான தகுதி உடையவை என்றும், கர்நாடகாவை பொறுத்தவரை, கன்னடத்திற்கு மட்டுமே முன்னுரிமை என பதிலடி கொடுத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, 3 மொழிக் கொள்கை கர்நாடகத்திற்கு தேவையில்லை என்றும், அது கர்நாடகாவில், வடகத்திய ஆதிக்கத்தையே நிலை நிறுத்தும் என தெளிவுபட குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் மட்டுமே இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், தற்போது, கர்நாடகாவிலும் அதே போன்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

click me!