நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் ! சர்ச்சையைக் கிளப்பிய பிரக்யாசிங் தாக்குர் ! அலறியடித்து மறுப்புத் தெரிவித்த பாஜக !!

By Selvanayagam PFirst Published May 16, 2019, 9:11 PM IST
Highlights

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே  ஒரு தேசபக்தர் என்று பாஜக  பெண் வேட்பாளர் பிரக்யாசிங் தாக்குர் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஆனால் இப்படித் தெரிவித்ததற்கு பிரக்யாசிங் தாக்குர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக  வலியுறுத்தியுள்ளது.
 

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்கையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது  என பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் பெண் சாமியாரும் பாஜக வேட்பாளருமான மலேகான் குண்டுவெடிப்பில் கைதான பிரக்யா சிங் தாக்குர், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய பிரக்யாசிங்  நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார் எனக் கூறினார். மேலும்,  நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும் எனவும் கூறினார். 

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யாசிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளன. 

ஆனால் இந்த சர்ச்சையில் இருந்து  பாஜக  விலகிக்கொண்டது.  இது தொடர்பாக பாஜக  செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ மகாத்மா காந்தி தொடர்பாக பிரக்யாசிங் தாக்குர் கூறிய கருத்தை முற்றிலும் ஏற்க முடியாது. இந்த கருத்துக்காக அவருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும். தனது ஆட்சேபகரமான கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும் எனவும் ஜி.வி.எல். நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். 

click me!