மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும்..!! அமைச்சர் தங்கமணி உறுதி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2020, 2:02 PM IST
Highlights

சென்னையில் 390 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதைபோல் மற்ற மாவட்டங்களில் புயல் காரணமாக ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து மின்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை சரி செய்வதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக தமிழகத்தை மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை நிவர் புயல் கரைகடந்துள்ளது. ஆனாலும் அதைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. கனமழையால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தைத்தாண்டி தண்ணீர் வடிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 67 இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

அதேபோல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது, மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது, சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 390 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதைபோல் மற்ற மாவட்டங்களில் புயல் காரணமாக ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து மின்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை சரி செய்வதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது: மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும், மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டதால் பாதிப்புகள். மற்றும் அசம்பாவிதங்கள் குறைக்கப் பட்டுள்ளது, புயல் பாதித்த மாவட்டங்களில் விரைவில் மின் விநியோகம் சீராக்கப்படும் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து மின் பணியாளர்களை ஈடுபடுத்தும் அளவிற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

 

click me!