எடப்பாடியாரை தொலைபேசியில் அழைத்த அமித்ஷா... தமிழகத்திற்கு எந்த உதவிகளையும் செய்ய தயார் என அறிவிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2020, 1:32 PM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, புயல் கரை கடந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாயாரணசாமி ஆகியோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளேன். 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியுள்ள நிவர் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். அதேபோல் புதுச்சேரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், வெள்ள பாதிப்புகள் குறித்தும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியிடமும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விசாரித்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக தமிழகத்தை மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை புயல் கரைகடந்துள்ளது. ஆனாலும் அதைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. கனமழையால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தைத்தாண்டி தண்ணீர் வடிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 67 இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது, மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது, சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரமணி, வேளச்சேரி பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.அதேபோல அண்டை மாநிலமான பாண்டிச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என இரு மாநில முதலமைச்சர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்திருப்பதாவது:  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, புயல் கரை கடந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாயாரணசாமி ஆகியோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளேன். மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என உறுதி அளித்துள்ளேன்.

தேசிய மீட்பு படையினர் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வருகை தந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என கூறியுள்ள நிலையில், நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

click me!