12 ஆயிரம் கோடியில் பிரமாண்ட திட்டம்..!! சுற்றுச் சூழல் தாக்கீது இல்லாமல் செய்ய வேண்டாம் என கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2020, 12:16 PM IST
Highlights

59 கோடி கனஅடி ஜல்லி, 45 கோடி கனஅடி இயற்கை மண் (Earth Work),மணல் 6 கோடி கனஅடி, சிமெண்ட் சுமார்  7.5 இலட்சம் டன், தார் 7 இலட்சம் டன் என இவ்வளவு வளங்கள் தேவைப்படும் திட்டத்தை சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் நிறைவேற்றுவது சரியா?.

தமிழக நிலப்பரப்பை பாலைவனமாக்கப் போகும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழுமையான சூழல் தாக்க மதிப்பீடுகளை செய்யாமல் திட்டங்களை முன்னெடுக்கக்கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது இது குறித்து அந்ந அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:- 59 கோடி கனஅடி ஜல்லி, 45 கோடி கனஅடி இயற்கை மண் (Earth Work),மணல் 6 கோடி கனஅடி, சிமெண்ட் சுமார்  7.5 இலட்சம் டன், தார் 7 இலட்சம் டன் என இவ்வளவு வளங்கள் தேவைப்படும் திட்டத்தை சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் நிறைவேற்றுவது சரியா?. "தம் உருவாக்கத்திற்குப் பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் மலைகளை நாம் ஒருமுறை பெயர்த்தெடுத்துவிட்டால் ஒருபோதும் மீட்டுருவாக்க முடியாது. மணல், நீர் போன்ற சில வளங்கள் கட்டுமானங்களுக்காக எடுக்கப்படும்போது மீண்டும் ஆறுகள் மலைகளில் ஏற்படும்  மண்ணரிப்பு மூலமாகவும் இயற்கையான நீர் சுழற்சி மூலமாகவும்  மீண்டும் அவை (ஓரளவுக்கு) புதுப்பிக்கப்படுகின்றன. எனினும் அவை அழிக்கப்படும் வேகம் புதுப்பிக்கப்படும் வேகத்தைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும். கண்மூடித்தனமான வேகத்தில் வரைமுறையற்று இயற்கை வளங்களை அழிப்பது இப்புவியில் மனிதனின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

ஆற்றுப்படுகைகளில் உள்ள மணலானது நீரை வடிகட்டி நிலத்தடிநீரை மேம்படுத்தக்கூடியது. மணல் எவ்வளவு ஆழமானதாக ஆற்றுப்படுகையில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் அப்பகுதியில் புதுப்பிக்கப்படும். ஆனால் கட்டுமானங்களுக்காக அதிகமாக மணலும் நன்னீரும் சுரண்டப்படும்போது இதற்கு எதிர்மாறான விளைவே ஏற்படுகிறது.” இதைச் சொல்லியிருப்பது யாரோ சுற்றுச்சூழல் ஆர்வலரோ அல்லது அமைப்போ இல்லை. இந்தியன் ரோட் காங்கிரஸ் (ஐஆர்சி) என்றழைக்கப்படும் இந்தியச் சாலைப் பொறியாளர்களின் Apex Body-இன் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான சிறப்பு வெளியீடு SP 108-2015 தான் இதைச் சொல்கிறது. இந்திய சுதந்திரத்துக்கும் முன்பே அமைக்கப்பட்ட இந்த ஐஆர்சிதான் இந்தியாவில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போன்றவற்றை வடிவமைக்கும்போது கைக்கொள்ள வேண்டிய தரநிர்ணயங்கள் மற்றும் வழிமுறைகளை வரையறுக்கிறது. இந்தியாவில் அமைக்கப்படும் எந்த நெடுஞ்சாலைத் திட்டங்களானாலும் ஐஆர்சியின் வழிமுறைப்படியே அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் ஒருபுறம் ஐஆர்சியின் வழிகாட்டுதல்கள் இப்படிச் சொன்னாலும் இன்னொருபுறமோ நமது நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெருமளவு இயற்கை வளங்களையும், வாழிடங்களையும் அழித்தும் மாசுபடுத்தியுமே செயல்படுத்தப்படுகின்றன. நம் பொறியாளர்கள் குறைந்த இயற்கை வளங்கள் மற்றும் குறைந்த ஆற்றல் பயன்பாடுகொண்ட மாற்று வழிகள் எதையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நெடுஞ்சாலைகள் அமைக்கத் தேவையான முக்கியப்  பொருட்களான புளூமெட்டல் எனப்படும் உடைக்கப்பட்ட பாறை (ஜல்லி), கிராவல், இயற்கை மண், மணல், தார், சிமெண்ட் மற்றும் தண்ணீர். இவற்றில் முக்கியப் மூலப்பொருளான ஜல்லிக்காக அமைக்கப்படும் குவாரிகள் தாம் வெளியேற்றும் சிலிக்கான்  துகள்களால் காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் காரணமாகின்றன. அத்தோடு பாறைத்தகர்ப்புகள் பல்லுயிரின வளத்துக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. மணல் அல்லது நீரின் சூழல் முக்கியத்துவம் குறித்து நாம் எந்த விளக்கமும் தரவேண்டியதில்லை. அடுத்து சிமெண்டானது உலகின் மொத்த கார்பன் வெளியீட்டில் எட்டு விழுக்காடு உமிழ்வுக்குக் காரணமாக இருக்கிறது. அது மட்டுமின்றி சிமெண்டின் மூலப்பொருளான கால்சியம் கார்பனேட்டுக்காக வளமான நிலங்கள் அகழப்பட்டுச் சூறையாடப்படுவதும் அருகாமை மக்களும் விவசாயமும் சிமெண்ட் உற்பத்தியால் நசிவதும் நாம் அறிந்ததே. 

இந்நிலையில் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலை உறுதிப்படுத்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு தனது இணையதளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் வழிகாட்டு நெறிப்படி இத்திட்டங்களுக்கு ‘சூழல் தாக்க மதிப்பீடு’ கட்டாயமல்ல என்ற ஓட்டையைப் பயன்படுத்தி ஐஆர்சி-இன் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படாமல் இத்திட்டங்கள் டெண்டர் விடப்பட்டிருக்கின்றன. உண்மையிலேயே அரசு சூழல் அக்கறை கொண்டதாகவிருந்தால் இத்திட்டத்தின் பிரம்மாண்டத்தையும் அது கொடுக்கும் சூழல் தாக்கத்தையும் கருத்தில்கொண்டு சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் ஐஆர்சி தான் உச்சபட்ச உறுப்பு என்ற அடிப்படையில் அதன் வழிகாட்டு நெறிகளை நெடுஞ்சாசைத்துறை பின்பற்றியிருக்க வேண்டும். ஐஆர்சி 104-1988; “சாலைக் கட்டுமானங்கள் சுற்றுச்சூழலைப் பாதிப்பவை, எனவே சாலைத்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்கத்தைக் கணக்கில்கொள்ளுவது முக்கியமானது மட்டுமல்ல, அவசியமானது. எனவே  சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே அவற்றிற்கான ஒப்புதல் வழங்கப்படவேண்டும் என்று ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு கேட்டுக்கொள்கிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!