
தமிழகத்திலுள்ள தொன்மையான கோயில்களைச் சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை என ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டபின் ஓய்வுபெற்ற சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தான் ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள சுமார் 290 கோயில்களுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் அங்குள்ள சிலைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் தொன்மையான கோயில்களில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை எனவும், அச்சிலைகள் அனைத்தும் தொன்மையானது என ஆவணப்படுத்தப் படாமலும், பதிவு செய்யப்படாமலும் இருப்பதாகவும் கூறினார். அதன் காரணமாக அவற்றை உரிமைகோர முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், முறையான கணக்கெடுப்பின்மை மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதே சிலைக் கடத்தலுக்கும் காரணமாக அமைவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தனது சார்பில் தமிழகத்திலுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை தொன்மையானது என ஆவணப்படுத்தி, பதிவு செய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் திருக்கோயில்களில் சிலைகளை பாதுகாக்க பாதுகாப்பு அறை அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் மதிக்காமல் இருந்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், பாதுகாப்பு அறைகளை திரிக்கோயில்களில் உருவாக்குவது அவசியம் என்பதையும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் நம் நாட்டு சிலைகள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளதைப் போல் நம் நாட்டிலும் அருங்காட்சியகங்களில் சிலைகளை காட்சிப் பொருட்களாக வைத்து பணம் சம்பாதிக்கும் அவலம் அரங்கேறி வருவது வேதனையளிப்பதாக கூறினார்.
மேலும், சிலைகளை பாதுகாக்கும் பொருட்டு அவற்றை ஆவணப்படுத்தி, பதிவு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், கட்டாயம் அழைப்பை ஏற்று அக்குழுவில் தனது பங்காற்ற தயாராக இருப்பதாகவும், விரைவில் தனது மனுவை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நமது முன்னோர்கள் நம்மை பாதுகாக்கும்படி விட்டுச் சென்ற தொன்மையான சிலைகளை நம்மால் பாதுகாக்க இயலும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல் தமிழக திருக்கோயில்களில் இருந்து திருடுபோய் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல்வேறு சிலைகள் தனது பதவி காலத்தின்போது மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் அப்பணியை சிறப்பாக மேற்கொண்டு சிலைகளை மீட்டு வருவதாகவும் கூறினார்.
விரைவில் அமெரிக்காவில் இருந்து 1972 ஆம் ஆண்டு புன்னையநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து திருடுப்பொன கைலாசநாதர் மற்றும் நடராஜர் சிலைகள் உட்பட 10 தொன்மையான சிலைகள் தமிழகம் வரவுள்ளதாகவும் தெரிவித்தார். 1972 ஆம் ஆண்டு திருடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டபோதும், அப்போதிருந்த அதிகாரிகள் அதை பாதுகாக்கத் தவறியதால் அச்சிலைகள் மீண்டும் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்தான் அச்சிலைகள் மீண்டும் தமிழகம் கொண்டு வரப்பட்டவுள்ளதாக தெரிவித்தார்.