5 நாட்களில் நிறுத்திய திமுக அரசு! பாதி பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கல! ஆளுங்கட்சியை லெப் ரைட் வாங்கும் இபிஎஸ்

By vinoth kumar  |  First Published Jan 20, 2024, 6:52 AM IST

ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வாங்காதவர்களின் எண்ணிக்கை சுமார் 100 முதல் 200 வரை உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25 சதவீதத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், ஐந்தே நாட்களில் நிறுத்திய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2024-ஆம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை மட்டும் அறிவித்த திமுக அரசு, பொங்கல் பரிசு பணம் பற்றி அறிவிக்கவில்லை. எனது அறிக்கைக்குப் பின்பு ரூபாய் ஆயிரத்தை பொங்கல் பரிசாக அறிவித்த திமுக அரசு, அதையும் அனைவருக்கும் வழங்காத நிலையில் அறிவிப்பு செய்தது. அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பாக அரிசி, பாசிப் பருப்பு, சர்க்கரை மற்றும் கரும்பு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் பரிசுப் பணத்தை நேரடியாக குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் சொல்லி வந்த கோரிக்கைகளையும் திமுக அரசு ஏற்க மறுத்துவிட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Gayathri Raghuram join ADMK : பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்!

எங்களது ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்கள், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நியாய விலைக் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. எந்த குடும்ப அட்டைதாரர்களும் விடுபடாமல் பார்த்துக்கொண்டோம். திமுக அரசு இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கியது. 

பொங்கல் பண்டிகைக்காக முன்னரே சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும், கூட்டம் குறைந்தவுடன் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 18ம் தேதி நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்குமாறு கேட்டபோது ஜனவரி 14-ம் தேதியோடு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை நிறுத்தச் சொல்லி அரசு உத்தரவிட்டதன் பேரில், 14-ம் தேதிக்குப் பிறகு நிலுவையில் இருந்த பொங்கல் பரிசுப் பணத்தை அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும், பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் பற்றிய விபரங்களை அரசுக்கு அனுப்பிவிட்டதாகவும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து பொங்கல் பரிசு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வாங்காதவர்களின் எண்ணிக்கை சுமார் 100 முதல் 200 வரை உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2022 ஜனவரி பொங்கலின் போது பரிசுப் பணம் வழங்காமல், உருகிய வெல்லம், பல்லி விழுந்த புளி, பப்பாளி விதை கலந்த மிளகு, சிறு வண்டுகள் உள்ள ரவை மற்றும் கோதுமை மாவு என்று குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்த முடியாத 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது. தொடர்ந்து, 2023 ஜனவரி பொங்கலின் போது முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழு கரும்பு வழங்காமல் பொங்கல் தொகுப்பை அறிவித்தது. எனது அறிக்கை மற்றும் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக கரும்பு சேர்க்கப்பட்டது.

இதையும் படிங்க;- இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை அதிமுக கைவிட்டதே.. இவரை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. பூங்குன்றன்..!

இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25 சதவீதத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், ஐந்தே நாட்களில் நிறுத்திய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அறிவிக்கப்பட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ந்து வழங்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!