#BREAKING புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா... துணை நிலை ஆளுநரிடம் கடிதம் ஒப்படைப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 22, 2021, 12:04 PM IST
Highlights

ஆட்சி கலைக்கப்பட்டதை அடுத்து அவையில் இருந்து வெளியேறிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து தங்களுடைய ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை 10 மணிக்கு கூடிய நிலையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய முதல்வர், ஐந்து ஆண்டு கால ஆட்சி குறித்து 40 நிமிடங்கள் பேசிய நிலையில், நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கக்கூடாது என அரசு கொறடா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாததால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும்,  காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. 

ஆட்சி கலைக்கப்பட்டதை அடுத்து அவையில் இருந்து வெளியேறிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து தங்களுடைய ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் கொடுத்துவிட்டோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பதிலளித்தார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் உரிமையை பறித்து, நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து ஆட்சி கவிழ்ப்பு செய்த பாஜகவையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என ஆவேசமாக தெரிவித்தார். 
 

click me!