
ஒக்கி புயலால் ஓங்கி அடிவாங்கியது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மட்டுமில்லை, அந்த தொகுதியின் எம்.பி.யான மத்தியமைச்சர் பொன்னாரின் அரசியல் கெத்தும்தான்!
கடலினுள் சென்று காணாமல் போன பல நூறு மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் பெரும் அக்கறை காட்டவில்லை! என்று அந்த மாவட்ட மீனவர்கள் கொதித்துக் கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் ஆதங்கம் பொன்னார் மீது திரும்பியிருக்கிறது. இதில் தர்மசங்கடத்தில் தவிக்கும் பொன்னாரால் தனது தொகுதிக்குள் சில இடங்களுக்கு போகவே முடியாத அளவுக்கு சூழல் சிக்கலாகி கிடக்கிறது.
இந்நிலையில் இந்த பாதிப்பை ‘தேசிய பேரழிவு’ என்று அறிவிக்க வைத்து மத்திய அரசிடம் பெரும் நிதியுதவியை பெற்றுக் கொடுத்து தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளலாம்! என்று அவர் நினைத்தார். ஆனால் அதற்கும் வழியில்லாமல் கையை விரித்துவிட்டது மோடி அரசு.
மத்திய அரசில் கேபினெட் அந்தஸ்தில் இருக்கும் உங்களால் சொந்த தொகுதிக்கான உரிய நியாயத்தை கூட பெற்றுத் தர முடியவில்லையே? என்று மீனவ சங்கங்கள் அவரை கடல் நீரில் கழுவிக் கழுவி ஊற்றுகின்றன. இந்நிலையில், நிவாரண பணிகள் மாநில அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி திடீரென மறியலிலெல்லாம் உட்கார்ந்தார் பொன்னார். ’இதை வெற்று சீன்’ என்று அந்த தொகுதியிலிருக்கும் கிறித்துவ அமைப்புகள் விமர்சித்தன. அதேவேளையில் தமிழக அமைச்சரவை பொன்னாரின் இந்த காரியத்தால் அதிர்ந்து, மோடியின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றதாம். இதைத்தொடர்ந்து பொன்னாருக்கு ‘மாநில அரசை பழிப்பதெல்லாம் வேண்டாம்’ என்று உத்தரவிட்டதாக தகவல்.
இந்நிலையில் சமீபத்தில் ஒக்கிப்புயல் விவகாரம் குறித்து பேசியவர், புயலில் சிக்காத மீனாக வழுகி, நழுவி, குளறி வைத்துள்ளார் இப்படி...
“ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல தலைமுறைகள் காணாத மாபெரும் இழப்பை சந்தித்துவிட்டோம். மாயமான மீனவர்களை மீட்க இந்திய கடற்படை தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் சுமார் 700 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் சில ஊடகங்கள் சூடான செய்தி தரவேண்டும் என்பதற்காக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
மீனவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் எதையும் செய்யவில்லை எனும் பொய்யான தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கன்னியாகுமரியில் புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும் விசிட் செய்தேன். ஆனால் சில அரசியல் காரணங்களை மனதில் கொண்டு, கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்தேன்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒரு சில இயக்கங்கள் தவறான செய்திகளை பரப்பியது போல் மீனவர்கள் மத்தியில் இப்போது மத்திய அரசுக்கு எதிரான வதந்திகள் பரப்பப்படுகின்றன.” என்றவர்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூறு குடும்பங்கள் வீடில்லை, வாசலில்லை, சோறில்லை, நீரில்லை என்று அழுது கொண்டிருக்கையில் “கன்னியாகுமரி மாவட்டத்தின் மூன்று பகுதிகளை சுற்றியும் கடல் இருப்பதால் கடற்படை தளம் அமைக்கப்பட வேண்டும். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட வேண்டும்.” என்று சொல்லி ஏற்கனவே காய்ந்து கிடக்கும் மீனவர்களின் மனதை கருவாடாக்கியுள்ளார்.
என்னாங்க பொன்னார், இப்படி மக்கள் மனங்களை புண்ணாக்கிட்டீங்களே? என்று இதை வைத்து வகுந்தெடுக்கிறார்கள் விமர்சகர்கள்.