
சேலம்:
சேலத்தில் பயணம் மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழக அரசு டியூப் லைட் போல் மெதுவாக செயல்படுவதாகக் குறை கூறினார்.
சேலம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து ஆய்வு செய்து திட்டங்களை விரைவு படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை, மாநில அரசு உடனே வாங்கி செயல்படுவதில்லை, மெத்தனமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு,ம் மாநில அரசின் எல்லா விஷயங்களிலும் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஏற்க முடியாது. மத்திய அரசு செயல்படும் வேகத்துக்கு மாநில அரசை துரிதப் படுத்த முயற்சிக்கிறோம் என்றார்.
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் மாநில அரசு வேகம் காட்டவில்லை. நான் முதல்வரானது சேலம் மாவட்டத்துக்குப் பெருமை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எடப்பாடியிலேயே 20க்கும் மேற்பட்டோர் டெங்குவினால் இறந்திருக்கிறார். அவரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படி இருக்கும் போது நடவடிக்கை மிகத்தாமதமாகத்தானே இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது டெங்குவினால் உங்கள் பகுதி மட்டும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்காதீர்கள்... தமிழகம் முழுதும் பாதிக்கப்பட்டிருகிறது. நடவடிக்கை சில விஷயங்களில் துரிதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது தாமதமான நடவடிக்கை என்று தோன்றுகிறது. டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த ஒரு உதவியையும் தமிழக அரசு கேட்கவில்லை. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டும் பெறவில்லை என்று கூறினார்.
அப்போது, தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. சுவிச்ச போட்டா உடனே லைட்டு எரியணும் இல்ல... ஆனா டியூப் லைட்டு போல் மினுக் மினுக் என்று எரிந்தால் என்ன செய்வது? என்று சொல்ல, அதற்கு ஒரு செய்தியாளர், “தமிழக அரசு டியூப் லைட் போல செயல்படுகிறது” என்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு இன்னொரு செய்தியாளர், டியூப் லைட்டா... இல்லை பியூஸ் போயிடுச்சா? என்று வினவ, அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், டெங்குவை விரைவாக தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்... மத்திய அரசில் திட்டம் போட்டவுடனேயே இங்கே செயல்படுத்தப் பட வேண்டும் அது போல் விரைவாக இருந்தால் சரியாக இருக்கும் என்றார்.