
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றிரவு தில்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த சந்திப்பு குறித்து நம்மிடம் உறுதிப்படுத்திய மைத்ரேயன் எம்.பி., தாமும் துணை முதல்வருடன் தில்லிக்குச் சென்று, பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகக் கூறினார். மேலும், ஓ. பன்னீர்செல்வத்துடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் இன்று இரவு தில்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்று காலை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், அரசு ஊழியர் சம்பள உயர்வு, டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாயின. இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து, டெங்கு குறித்த விமர்சனங்கள் அரசின் மீது முன் வைக்கப்படுகின்றன. அரசு செயல்படா அரசாக இருப்பதாக, டெங்கு வந்த அரசாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சியினரால் கூறப்பட்டு வருகின்றன.
மேலும், தினகரன் ஆதரவு கோஷ்டியினர், குறிப்பாக தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர், பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆட்சியில் உள்ளவர்கள் கவனம் செலுத்துவதாகவும், வேறு எந்த வேலையும் நடக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். இதனிடையே, சசிகலாவின் பரோல் முடிந்து நாளை அவர் பெங்களூரு சிறைக்குச் செல்லவிருக்கிறார். அவருடைய ரகசிய ஆலோசனைகளால், ரகசியமாக புயல் கிளம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் இரட்டைஇலை சின்னத்துக்கு மல்லுக்கட்டி வரும் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இதற்காக அடிக்கடி தில்லிக்குச் சென்று முகாமிட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய கட்டாயச் சூழல் வேறு இருப்பதால், அதற்குள் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றாக வேண்டிய அவசியம் இந்த அணியினருக்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் மாட்டிக்கொண்டு வாய்தாக்களுக்குள் சிக்கிக் கொண்டு திணறுவதால், தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறது எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு. இத்தகைய நிலையில் தில்லி செல்லும் ஓபிஎஸ் குழுவினர், நாளை மோடியைச் சந்தித்து பேசவுள்ளனர்.