நானும்தான் விமர்சிக்கிறேன்... என் நாக்கை அறுத்திருவாங்களா? பொன்னார் கண்டனம்!

By vinoth kumarFirst Published Sep 26, 2018, 11:09 AM IST
Highlights

நானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன், என் நாக்கையும் அறுப்பார்களா? என்று அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன், என் நாக்கையும் அறுப்பார்களா? என்று அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஊலை கண்டுப்பிடித்தவர்கள் திமுகவினர் தான் என்றார். மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல்; விவசாயத்திற்காக பூச்சி மருந்து வாங்கியதில் ஊழல்; மின்சாரம், நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர்தான். லஞ்சத்தில் திளைத்தவர்கள் திமுகவினர்தான்.

 

தமிழகத்தில் தற்போது அம்மாவின் பொற்கால ஆட்சி நடக்கிறது. வேளாண்மை துறை, உள்ளாட்சி துறை என அனைத்திலும் வளர்ச்சி.  இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என யாராவது தவறாக பேசினால், அவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என்றார். அவரது இந்த பேச்சு அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், நானும்தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன். என்னுடைய நாக்கையும் அறுப்பார்களா? என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் மாண்போடு பேச வேண்டும். அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். காங்கிரசும், தி.மு.கவும் தான் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி உள்ள 7 பேரின் உயிரை வைத்து அரசியில் செய்ய வேண்டாம். அவர்கள் சிறையில் இருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம். அவர்களை ஆளுநர் விடுவித்தால் விடுவிக்கட்டும். இல்லை என்றால் சிறையில் இருக்கட்டும். நானும் தான் அ.தி.மு.க அரசு குறித்து விமர்சனம் செய்கிறேன். என்னுடைய நாக்கை அறுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!