விஸ்வரூபம் எடுக்கும் குட்கா ஊழல்... 6வது நபர் கைது! விஜயபாஸ்கரை நெருங்கியது சி.பி.ஐ!

Published : Sep 26, 2018, 10:40 AM ISTUpdated : Sep 26, 2018, 10:52 AM IST
விஸ்வரூபம் எடுக்கும் குட்கா ஊழல்... 6வது நபர் கைது! விஜயபாஸ்கரை நெருங்கியது சி.பி.ஐ!

சுருக்கம்

குட்கா ஊழலில் 6வது நபராக சுகாதார ஆய்வாளரான சிவக்குமாரை சி.பி.ஐ கைது செய்துள்ளது விஜயபாஸ்கருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா ஊழலில் 6வது நபராக சுகாதார ஆய்வாளரான சிவக்குமாரை சி.பி.ஐ கைது செய்துள்ளது விஜயபாஸ்கருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பான தனது நடவடிக்கையை துவங்கியது சி.பி.ஐ. முதலில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவிடம் இருந்து துவங்கிய அதிகாரிகள், ஒரே நேரத்தில் 33 இடங்களில் சோதனை நடத்தி தமிழகத்தை அதிர வைத்தனர். அதிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடுகளுக்குள்ளும் சி.பி.ஐ நுழைந்தது அகில இந்திய அளவில் எதிரொலித்தது. 

 ஆனால் இரண்டே நாட்களில் 5 பேரை கைது செய்த சி.பி.ஐயின் வேகம் திடீரென குறைந்தது. இதனால் குட்கா முறைகேடு வழக்கு கிடப்பில் போடப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தற்போத திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளராக உள்ள சிவக்குமாரை விசாரணைக்கு தூக்கி வந்தது சி.பி.ஐ. திங்கட்கிழமை விசாரணை முடிந்து அவரை அனுப்பி வைத்த சி.பி.ஐ செவ்வாயன்று மறுபடியும் வரவழைத்து கைது செய்து சிறையில் அடைத்தது. சிவக்குமார் கைது செய்யப்பட்ட தகவல் அவருடைய குடும்பத்தினருக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது.

 

ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அதிர வைத்துள்ளது. ஏனென்றால் தற்போது சுகாதார ஆய்வாளராக இருக்க கூடிய சிவக்குமார், குட்கா முறைகேடு சமயத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்தவர். போலீசார் மாதவராவ் குடோனில் கைப்பற்றிய பொருட்களில் குட்கா எதுவும் இல்லை என்று சான்றிதழ் வழங்கியவர் இந்த சிவக்குமார் தான். இவரை முதலிலேயே சி.பி.ஐ தூக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத நேரத்தில் கோழியை அமுக்குவது போல் அமுக்கியுள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், குட்கா முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சமயத்தில் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தமிழக அரசே கூறியது. ஆனால் சுகாதாரத்துறை ஆய்வாளரான சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிவக்குமாருக்காக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி ஆஜரானார். 

ஒரு சாதாரண சுகாதார ஆய்வாளருக்காக இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞரான முகுல் ரோஹ்தகி ஆஜரானது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் முகுல் ரோஹ்தகிக்கு ஒரு நாள் கட்டணமே பல லட்சங்கள். அப்படி இருக்கையில் விஜயபாஸ்கர் தான் சிவக்குமார் மூலமாக உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த சிவக்குமாரை தான் தற்போது சி.பி.ஐ கைது செய்துள்ளது. விசாரணையின் போது விஜயபாஸ்கர் குறித்து சில தகவல்களை சிவக்குமார் கசியவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே குட்கா ஊழல் வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்வதற்கான நடவடிக்கையின் இறுதிகட்டத்தில் சி.பி.ஐ உள்ளதாக பேசப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!