கருணாசை கைவிட வேண்டாம்! பெங்களூர் சிறையில் இருந்து தினகரனுக்கு வந்த அவசர தகவல்!

By vinoth kumarFirst Published Sep 26, 2018, 9:55 AM IST
Highlights

திருவாடனை எம்.எல்.ஏ கருணாசை கைவிட்டு விட வேண்டாம் என்று பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு அவசரமாக செய்தி வந்துள்ளது.

திருவாடனை எம்.எல்.ஏ கருணாசை கைவிட்டு விட வேண்டாம் என்று பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு அவசரமாக செய்தி வந்துள்ளது. தனது நம்பிக்கைக்கு உரிய எம்.எல்.ஏக்களில் ஒருவர் கருணாஸ் என்று தினகரன் அடிக்கடி கூறுவார். ஆனால் சசிகலாவை கருணாஸ் சந்தித்த விவகாரத்தில் அவர் மீது தினகரனுக்கு சிறிது அதிருப்தி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜாதி துவேசத்தை ஏற்படுத்தும் வகையில் கருணாஸ் பேசியதையும் தினகரன் ரசிக்கவில்லை. மேலும் கருணாஸ் கைது செய்யப்பட்ட போது கூட தினகரன் கண்டனம் தெரிவிக்கவில்லை. 

கருணாசுக்கு தான் அறிவுரை கூறும் வகையில் தினகரன் பேசியிருந்தார். அதே சமயம் தி.மு.க கருணாசை தாங்கி பிடிக்கும் வகையில் செயல்பட்டது. கருணாஸ் கைது செய்யப்பட்ட உடன் ஆயிரம்விளக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வம் காவல்நிலையத்திற்கே நேரில் சென்றார். அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு வரும் பூச்சி முருகனும் கூட காவல்நிலையம் சென்றார். மேலும் தி.மு.க வழக்கறிஞர்களும் கூட நீதிபதிகள் குடியிருப்பில் தென்பட்டனர். ஆனால் தினகரன் கருணாசை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்ட தகவல் சசிகலாவிடம் சொல்லப்பட்டுள்ளது. உடனடியாக தினகரனுக்கு சசிகலா அவசர தகவல் அனுப்பியுள்ளார். அதாவது, கருணாசுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி தினகரனை சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்தே தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்.எல்.ஏக்கள் நான்கு பேரை வேலூர் சிறைக்கு தினகரன் அனுப்பி வைத்தார்.

ஆனால் செவ்வாய்கிழமை என்பதால் கைதிகளை சந்திக்க முடியாது என்று அவர்களை சிறைக்காவலர்கள் திருப்பி அனுப்பினர். ஆனால் வழக்கறிஞர் என்ற முறையில் சோளிங்கர் தொகுதி தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் குடியாத்தம் தொகுதியின் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ ஜெயந்திபத்மநாபனுக்கு மட்டும் சிறைக்குள் செல்ல அனுமதி கிடைத்தது. 

கருணாசை சந்தித்த இருவரும் சசிகலாவும், தினகரனும் உங்களுடன் தான் உள்ளனர். எதற்கும் அச்சப்பட வேண்டாம் அண்ணன் பார்த்துக் கொள்வார் என்று ஆறுதல் கூறியுள்ளனர். தினகரன் கருணாஸ் விவகாரத்தில் பாராமுகமாக இருக்கும் நிலையில் சசிகலா கருணாசுக்காக துடிப்பது ஏன் என்று அ.ம.மு.கவிலேயே முனுமுனுப்புகள் எழுந்தன. அதற்கு கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கருணாஸ் கவனித்துக் கொண்டதன் விளைவு தான் இது என்கின்றனர் சிலர்.

click me!