
தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் தடுப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
குமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க சில மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சில போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் இனயத்தில் துறைமுகம் வேண்டியதன் அவசியம் மற்றும் துறைமுகத்தால் ஏற்படும் பயன்கள் குறித்த கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் திட்டங்களை ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழக அமைச்சர்கள் தடுக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டால், கொக்கு முட்டையிடும் என அமைச்சர்கள் கூறுகின்றனர். கடல்வழி போக்குவரத்துக்கு திட்டம் வகுத்தால் மீன்பிடி வலைகள் அறுந்துபோகும் என கூறி அமைச்சர்கள் தடுப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.