அரசியல் வியூக வகுப்பாளர்கள் தேவை..! ஸ்டாலின், எடப்பாடியார் பாணியில் சசிகலா..!

By Selva KathirFirst Published Jun 12, 2021, 11:50 AM IST
Highlights

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இருந்த அரசியல் வியூக வகுப்பாளர்கள் முறையை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி. வெளிநாடுகளில் தேர்தல் வியூகம் தொடர்பான பணிகளில் இருந்து பிரசாந்த் கிஷோரை தனக்காக பணியாற்ற அமர்த்தி 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் மோடி. 

அரசியல் களத்திற்குள் நுழைய நேரம் பார்த்து காத்திருக்கும் சசிகலா, கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பாணியில் அரசியல் வியூக வகுப்பாளரை தேடிக் கொண்டிருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இருந்த அரசியல் வியூக வகுப்பாளர்கள் முறையை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி. வெளிநாடுகளில் தேர்தல் வியூகம் தொடர்பான பணிகளில் இருந்து பிரசாந்த் கிஷோரை தனக்காக பணியாற்ற அமர்த்தி 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் மோடி. இதனை தொடர்ந்து தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமானது. அந்த சமயத்தில் கடந்த தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்திருந்தது. மேலும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடியிடம் இருந்து வெளியே வந்து 2015ம் ஆண்டு நிதிஷ் குமாருக்காக பணியாற்றி அவரை மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றினார்.

இதனால் பிரசாந்த் கிஷோரை திமுகவிற்கு பணியாற்ற வருமாறு திமுக தரப்பு தூண்டில் போட்டது. அதிலும் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் தனக்கான இமேஜை உருவாக்க பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றிய சுனிலை மு.க.ஸ்டாலின் தனது அரசியல் வியூக வகுப்பாளராக நியமித்தார். அவர் போட்டுக் கொடுத்த ஸ்கெச்ட் படி கடந்த 2016 தேர்தலை திமுக எதிர்கொண்டது. அப்போது கலைஞர் இருந்த காரணத்தினால் முழுக்க முழுக்க சுனில் சொன்னதை ஸ்டாலினால் செயல்படுத்த முடியவில்லை.

ஆனால் கலைஞர் மறைவிற்கு பிறகு சுனில் முழுக்க முழுக்க ஸ்டாலினின் மனம் கவர்ந்த அரசியல் வியூக வகுப்பாளராக இருந்தார். அவர் வழிகாட்டுதலில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் கூட சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை திமுக ஏற்பாடு செய்தது. இதனால் சுனில் திமுகவிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியமானார். சுனில் போட்டுக் கொடுத்த திட்டங்களை அடிப்படையாக வைத்தே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். வெற்றி கிடைக்காவிட்டாலும் எடப்பாடி பழனிசாமிக்கு படு தோல்வி தவிர்க்கப்பட்டது. இதனால் தற்போதும் சுனிலுடன் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்து அரசியல் களம் காண துடித்துக் கொண்டிருந்த சசிகலா திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஆனால் சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் மறுபடியும் அரசியல் களம் காண சசிகலா ஆயத்தம் ஆகி வருகிறார். அதிமுகவை மறுபடியும் கைப்பற்றுவது தான் சசிகலாவின் திட்டமாக இருந்தாலும் தனது இமேஜை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தூக்கி நிறுத்த மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பாணியில் அரசியல் வியூக வகுப்பாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக கடந்த சில நாட்களாக சசிகலா சிலரை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றோருடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்கள் டீமில்இருந்தவர்களை இதற்காக சசிகலா பரிசீலனை செய்து வருவதாகவும் விரைவில் ஒருவரை ஒப்பந்தம் செய்து பணிகளை துவங்க உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

click me!