தேமுதிக- மநீம கட்சி நிர்வாகிகளை வளைக்கும் திமுக... நிற்கதியாய் தவிக்கும் கமல் -விஜயகாந்த்..!

By Thiraviaraj RMFirst Published Jun 12, 2021, 11:45 AM IST
Highlights

தேர்தலில் தோல்வி கண்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தேமுதிகவும், மக்கள் நீதி மய்யமும் மாவட்டச் செயலாளர்கள் கட்சி தாவுதால் மேலும் ஆட்டம் காணும் என்பது உறுதி

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது, அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

விருத்தாச்சலம் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கூட 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் தொகையை பறிகொடுத்தார். தேர்தலுக்கு முன்பு வரை அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த தேமுதிக, கடைசி நேரத்தில்தான் அமமுகவுடன் சேர்த்தது. அதிமுக கூட்டணியில் 14 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியதையோ, திமுகவிடம் பேரம் பேசியபோது அக்கட்சி தருவதாக கூறிய 8 இடங்களையோ ஏற்றுக் கொண்டிருந்தால் அக்கட்சிக்கு இந்த அளவில் படுதோல்வி ஏற்பட்டிருக்காது, என்று கட்சித் தலைமைக்கு எதிராக தேமுதிகவில் முணுமுணுப்பு சத்தம் கேட்கத் தொடங்கியது. மாவட்ட செயலாளர்கள் இந்த செய்தியை கட்சியின் தலைமைக்கு கொண்டு செல்ல விரும்பினர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளால் விஜயகாந்த், பிரேமலதா இருவரையும் நேரில் சந்தித்து பேச முடியவில்லை. இதனால் கட்சித் தலைமைக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி விழ ஆரம்பித்தது. தங்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்த மாவட்டச் செயலாளர்களில் பலர் இனியும் பொறுமை காப்பதில் பயனில்லை எனத் தீர்மானித்து திமுகவுக்கு தாவுவதற்கு தயாராகிவிட்டனர்.

தேமுதிக மாவட்ட செயலாளர்களில் 20 பேர் வரை திமுகவில் இணைவதற்காக, திமுக மாவட்டசெயலாளர்கள் மூலம் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்தபின்பு, திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என்று அவர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டதும் பிரேமலதா டென்ஷனாகிப் போனார். இதைத்தொடர்ந்து உடனடியாக விஜயகாந்த் மூலம் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அவசர அறிக்கையில் கட்சி நிர்வாகிகள் யாரும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்வதுபோல் உள்ளது.

விஜயகாந்த் தனது அறிக்கையில், “தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும், கொரோனா பரவல் காரணமாகவும், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்.

இதில் கலந்துகொண்டு மாவட்டச் செயலாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாவட்ட செயாளர்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்லவேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும்.

நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக வலைத் தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்க விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் தேமுதிக தலைவரின் இந்த வேண்டுகோளை கட்சி நிர்வாகிகள் யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. இதுபற்றி கட்சி தாவ தயாராக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறும்போது, “இந்த தேர்தலில் சேரக்கூடாதவர்களுடன் கூட்டுச் சேர்ந்து படுதோல்வி கண்டதுதான் மிச்சம். மாவட்ட செயலாளர்களுக்கு இருந்த சொந்த செல்வாக்கும் சரிந்து போய் விட்டது. கட்சி முழுமையாக பிரேமலதா கட்டுப்பாட்டில் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக கூட்டணியிலேயே நீடிப்போம் என்று பல மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். திமுக பக்கம் செல்லலாம் என்று இன்னும் சிலர் வற்புறுத்தினர். ஆனால் இந்த இரண்டையுமே கட்சி மேலிடம் கேட்கவில்லை.


 
அமமுக கூட்டணியில் போட்டியிட்ட பல மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரும் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை சொந்தப் பணத்தை இழந்து இருக்கிறோம். எங்களுடைய வேதனையை கட்சி மேலிடம் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இப்போதே திமுகவில் இணைந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலின்போது போட்டியிட ஏதாவது வாய்ப்பு தருவார்கள்” என்று குறிப்பிட்டனர்.
 
தேமுதிகவுக்கு ஏற்படப்போகும் இந்த பெரும் சோதனை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் விட்டுவைக்காது போல் தெரிகிறது. ஏற்கனவே அக்கட்சியில் இருந்து பதவி விலகிய முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், சந்தோஷ் பாபு, குமரவேல், முருகானந்தம், கமீலா நாசர் போன்றோர் திமுகவில் சேர்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர தென் மற்றும் கொங்கு மண்டலங்களை சேர்ந்த இன்னும் சில மாவட்ட செயலாளர்களும் திமுகவில் தங்களை ஐக்கியமாகி கொள்ள தயாராகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கட்சியில், பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய நிலையில், பல மாவட்ட தலைவர்களும், எஞ்சிய சில நிர்வாகிகளும் ‘ஜூட்’ விடுவதற்கு தயாராக இருக்கும் தகவலை கேட்டதிலிருந்து, நடிகர் கமல் அதிர்ந்துபோய் இருக்கிறார், என்கிறார்கள். இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை உடனடியாக அரவணைத்துக் கொள்வதில் திமுக தலைமைக்கு தயக்கம் உள்ளது. இதனால் ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். எனினும் இவர்கள் அனைவருக்குமே உடனடியாக திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?” என்பது சந்தேகம்தான் என்றனர்.

தேர்தலில் தோல்வி கண்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தேமுதிகவும், மக்கள் நீதி மய்யமும் மாவட்டச் செயலாளர்கள் கட்சி தாவுதால் மேலும் ஆட்டம் காணும் என்பது உறுதி

click me!