கடைசி மூன்று நாள்..! பணப்பட்டுவாடாவுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்..! தடுக்க களமிறங்கும் அதிகாரிகள்.. திக் திக் தொகுதிகள்..!

By Selva KathirFirst Published Apr 8, 2019, 9:46 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடைசி மூன்று நாட்களுக்கான வியூகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடைசி மூன்று நாட்களுக்கான வியூகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் வெளிப்படையாக துவங்கியது. அதற்கு முன்னதாக இடைத்தேர்தலில் மட்டுமே வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வந்தனர். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்கெட்ச் போட்டு 40 தொகுதிகளிலும் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள் பணப்பட்டுவாடாவை எளிதாக செய்து முடித்தனர்.  

வாக்குக்கு 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை அப்போது வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தால் அப்போது கண்டுபிடிக்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2011 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள் பணம் கொடுக்க முடியாத அளவிற்கு நெருக்கடி கொடுத்தது தேர்தல் ஆணையம். இதனால் அப்போது அந்தக் கட்சி ஆட்சியை இழந்தது உடன் தற்போது வரை அதிகாரத்திற்கு வர முடியவில்லை. 

ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சியோ அதற்கு முன்பு இருந்த கட்சியை விட பணப்பட்டுவாடாவில் கெத்து காட்டியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பெரும்பாலும் அனைத்து வாக்காளர்களுக்கும் தலா 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வினியோகிக்கப்பட்டது. பணம் வாங்க மருத்துவர்கள் வீட்டிற்குள் பந்தல் போட்டு பணத்தை வீசிய சம்பவங்களும் நடைபெற்றது.

2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் நீடித்தது. அதிலும் கடைசி மூன்று நாட்கள் வாக்குப்பதிவுக்கு சரியாக மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் தான் பணப்பட்டுவாடாவை துவக்குவதை அரசியல் கட்சியினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த முறை அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சியாக இருப்பவர்களும், ஏன் புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருப்பவர்களில் கூட பணப்பட்டுவாடா விற்கு தயாராகி வருகின்றனர். ஆளும் தரப்பு வாக்கிற்கு ஆயிரம் ரூபாய் என்று தயாராகி வரும் நிலையில் எதிர்த்தரப்பு அதே தொகையை கொடுத்து விட வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகிறது. 

ஆளும் கட்சி இந்த வியூகத்தை வகுத்து அதற்குரிய வேலைகளில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் எதிர்க்கட்சித் தரப்பில் கடந்த சனிக்கிழமை தான் இந்த வியூகத்தை வகுத்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்காக எதிர்த்தரப்பின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அங்கு ஆஜராகி இருந்ததாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும் தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்த்தரப்பு எப்படி இதில் ஈடுபட போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அதேசமயம் ஏற்கனவே கடந்த தேர்தல்களில் பணப் பட்டுவாடா செய்த அனுபவத்தில் புதிதாக களமிறங்கியுள்ள அந்தக் கட்சி கிட்டத்தட்ட பாதி வேலையை முடித்து விட்டதாக கூறுகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் போய் இந்த நாள் முதல் அடுத்த ஒரு நாளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் அதிலும் குறிப்பாக 18 தொகுதிகளில் 50 சதவீத வாக்காளர்களுக்கு பட்டுவாடா முடிக்க வேண்டும் என்பதுதான் அந்தப் புதிய கட்சியினரின் குறி என்கிறார்கள். இப்படி மூன்று கட்சிகளும் பல வினியோகத்திற்கு வியூகம் வகுத்து உள்ள நிலையில் அதனை தடுக்க தற்போது முதலே முக்கிய நிர்வாகிகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் போகப்போக அனைத்து தொகுதிகளிலும் சம்பவங்களும் திடீர் திருப்பங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!