உள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்களில் முடியும் வேட்பு மனு தாக்கல்... நிறைவடையாத கூட்டணி பங்கீடு...அவசர கதியில் பேச்சுவார்த்தை!

By Asianet TamilFirst Published Dec 14, 2019, 8:36 AM IST
Highlights

வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து 2 நாட்கள் மட்டுமே இருப்பதால், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் திமுகவும் அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அவசரம் அவசரமாக தற்போது கட்சிகள் பங்கீட்டை முடிப்பதில் ஆர்வமாக உள்ளன. இதேபோல டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தங்கள் கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையும் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக எல்லைகள் மாற்றியமைக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 9 அன்று தொடங்கியது. இதுவரை சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துவருகிறார்கள். அரசியல் கட்சிகள் சார்பில் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. நேற்று இரவு அதிமுக முதல் கட்டமாக 7 மாவட்டங்களுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் இன்னும் தாக்கல் செய்யப்படாததற்கு கூட்டணி பங்கீடு இன்னும் நிறைவடையாததே காரணம்.
ஆளுங்கட்சியான அதிமுக தலைமை பாமக, தேமுதிக, பாஜக, தமாகா, புதிய நீதிக்கட்சி, சமக, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் வார்டுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முதல் கட்டமாகப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக அதிகாரம் வழங்கியுள்ளது. வேட்புமனுத்தாக்கல் திங்கள் கிழமை முடிய உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. திருப்பூர் உள்பட சில மாவட்டங்களில் அதிமுக கூட்டணியில் பங்கீடுகள் நிறைவடைந்துள்ளன. எனினும் கூட்டணி கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், திங்கள் கிழமை அன்று கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இதேபோல திமுகவும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் வார்டுகளை பகிர்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், இயூமுஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் இரு கட்டங்களாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். திமுகவிலும் மாவட்டச் செயலாளர்கள் மூலம் உள்ளாட்சி பங்கீடுகள் இன்று அல்லது நாளைக்குள் நிறைவடையும் என திமுக வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.  
வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து 2 நாட்கள் மட்டுமே இருப்பதால், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் திமுகவும் அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அவசரம் அவசரமாக தற்போது கட்சிகள் பங்கீட்டை முடிப்பதில் ஆர்வமாக உள்ளன. இதேபோல டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தங்கள் கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!