ஸ்டாலினுக்கு அரசியல் நமைச்சல்... திமுகவில் தலைவிரித்தாடும் சாதிய வன்மம், தாறுமாறாக கழுவி ஊற்றும் அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2020, 10:55 AM IST
Highlights

சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமை செயலுக்கு யார் காரணம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளாமலேயே கழக ஆட்சி மீது பழி போட முயற்சித்திருப்பது அவரது அறியாமையும் அரசியல் நமைச்சலையுமே காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.
 

ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்புக்கு திமுகதான் காரணம் என்ற உண்மையை மறைப்பதற்கு அதிமுக அரசு மீது பழி போடுவதா? என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பெஞ்சமின் கேள்வி எழுப்பி உள்ளார். தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைத்த கொடும் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு திமுகவில் தலைவிரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். மேற்படி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்தது துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதுதான் உண்மை. இப்படி தீண்டாமைக் கொடுமைக்கு காரணமான திமுக பின்னணியை மறுத்ததோடு சாதிய வன்மத்தோடு நடந்துகொண்டவரை காப்பாற்றுவதற்கு பெரும் முயற்சி செய்துவிட்டு இப்போது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அறிக்கை வெளியிட்டு ஆளும் இயக்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் நடத்த திமுக தலைவர்  முயற்சிப்பது பித்தலாட்டத்தை உச்சமாகும். 

ஏற்கனவே நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று தயாநிதிமாறன் பட்டியல் இனத்து மக்களை இழிவு செய்தபோது அதற்கு ஒரு வரி கூட கண்டனம் தெரிவிக்காத, திருவாளர் ஸ்டாலின், மருத்துவ சமுதாய மக்களை அம்பட்டையன் என்று இழிவு வசனம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை கண்டிக்காமலும், விளம்பரத்திற்காக அவ்வப்பொழுது பொய் வழக்குகளைத் தொடுத்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கும் திமுகவின் முக்கிய நிர்வாகி ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகளை தரக்குறைவாக பேசியதை கண்டிக்காமல் கடந்து போன திமுக தலைவர், ஸ்டாலின், சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமை செயலுக்கு யார் காரணம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளாமலேயே கழக ஆட்சி மீது பழி போட முயற்சித்திருப்பது அவரது அறியாமையும் அரசியல் நமைச்சலையுமே காட்டுகிறது என விமர்சித்துள்ளார். 

மேலும் கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சியில் தவறிழைத்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கிராம ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சியில் முன்னேற்றம் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்றதொரு சாதி மத வேறுபாடுகளுக்கு அகப்படாமல் ஒன்றிணைந்து செயல்படவும் மேலும் மற்ற ஊராட்சி அமைப்புகளிலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் அவரவருக்கு உரிய பணிகளை அரசு விதிகளுக்கு உட்பட்டு செய்யவும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு உரிய பயிற்சி மற்றும் தலைமை பண்புகளை வளர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படும். 

மேலும் ஊராட்சி மன்ற கூட்டங்கள் தொடர்புடைய அரசு விதிகளுக்குட்பட்டு முறையாக நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொருட்டு துறை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு முறையாக ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்துதல், கண்காணித்தல் தவறு இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குதல் போன்றவற்றை செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என  தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
 

click me!