நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டு வைத்த விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் இரண்டாவது நாளாக 3 மணி நேரம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் ராமாபுரம் காவல் நிலையத்தில் 6 மணி நேரம் கோயம்பேடு துனை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று திருவள்ளுரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலம் வீடியோ பதிவு மற்றும் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மதுரவாயில் காவல் நிலையத்தில் உள்ள துணை கமிஷனர் அறையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாள் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை முடிந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜயலட்சுமி முகமலர்ச்சியுடன் வெற்றி குறியுடன் இரண்டு கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்றார். செல்லும் வழியில் அவருக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜயலட்சுமி காரில் அழைத்து சென்று வருவது குறிப்பிடத்தக்கது. நீதிபதி முன்பு விஜயலட்சுமி ஆஜராகி சீமான் தன்னிடம் நெருங்கி பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணம் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள், சாட்சியங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம்; 13வது குற்றவாளியாக அசாருதீனை கைது செய்தது என்ஐஏ
விஜயலட்சுமி காவல் நிலையத்தில் இருந்து முகமலர்ச்சியுடன் வெளியே சென்றதால் எந்த நேரத்திலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சீமான் மீது பெண் வன்கொடுமை, கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.