ஆபாச மெசேஜ் அனுப்பினார்... கொலை மிரட்டல் விட்டார்! ஹெச்.ராஜா மீது போலீசில் புகார்!

By sathish kFirst Published Aug 21, 2018, 10:42 AM IST
Highlights

கொலை மிரட்டல் விட்டார், ஆபாச  மெசேஜ் அனுப்பினார் என  பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக ஆதரவாளர்  மனுஷ்யபுத்திரன், சில நாட்களுக்கு முன்பு கேரள மழை வெள்ளம் குறித்து ஊழியின் நடனம் என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவை  விமர்சித்திருந்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவு படுத்தியதற்கு இந்துக்கள் எதிர்வினையாற்றாத காரணத்தால் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டுள்ள அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன்அதே செயலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையில் புகார் செய்யவும்” என காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில்  நேற்று சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்ற மனுஷ்யபுத்திரன் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அவர் தனது புகார் மனுவில், “கடந்த 18ஆம் தேதி ஊழியின் நடனம் என்ற தலைப்பில் இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி பொதுவான ஒரு பெண்ணை வைத்து வர்ணித்து கவிதை ஒன்றை எழுதி சமூக ஊடகங்களில் வெளியிட்டேன். இந்தக் கவிதையில் எந்த ஒரு மதத்தையோ, மதம் சார்ந்த கடவுளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எழுதவும் இல்லை.

ஆனால் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, எனது கவிதையை இந்துக் கடவுளுக்கு எதிரான களங்கம் கற்பிக்கும் கவிதை என தனது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார். என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு காவல் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்திலும் பதிவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் தனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுவருவதாகவும், தனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறு பரப்பி காவல் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்யத் தூண்டியதால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153, 505-ன் படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலை மிரட்டல், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தனது உயிருக்கும், உடைமைக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படியும், தொழில்நுட்பச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுஷ்யபுத்திரன் வலியுறுத்தியுள்ளார்.

tags
click me!