
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நேற்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் நகரில் கடந்த ஏபரல் மாதம் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.
ஆனால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் ஆர்.கே.நகரில் 11 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது முறைகேடுகள் நடைபெற்றதால் இந்த முறை அதைத் தடுக்கும் முனைப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஜெயராம், இணை ஆணையர் சுதாகர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.