விஜயகாந்த் வந்துவிடுவார்! நீங்களும் வந்துவிடுங்கள்! பா.ம.கவுக்கு தூது அனுப்பிய அ.தி.மு.க!

By Selva KathirFirst Published Jan 31, 2019, 9:42 AM IST
Highlights

கடந்த முறையை போல பிரமாண்ட கூட்டணி அமைத்தால் தான் தி.மு.கவை எதிர்கொள்ள முடியும் என்று பா.ம.க தரப்புக்கு அ.தி.மு.க தரப்பு சேதி அனுப்பியுள்ளது. விஜயகாந்த் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாகவும், நீங்களும் வந்துவிட்டால் வட மாவட்டங்களில் தி.மு.க.வை காலி செய்துவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் பா.ம.கவை இணைக்கும் நடவடிக்கையில் அ.தி.மு.க தீவிரமாக இறங்கி வருகிறது.

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைத்து களம் இறங்க வேண்டும் என்கிற முடிவில் அ.தி.மு.க தீர்க்கமாக உள்ளது. இதனால் தான் வழக்கம் போல் தேர்தல் பணிகளில் அ.தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க படுவேகமாக இருப்பது தான் மற்ற கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

வழக்கமாக விருப்ப மனு விநியோகம், தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என அ.தி.மு.க புல்லட்வேகத்தில் செல்லும். ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் தங்களை நாடி வருபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது அக்கட்சியின் வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி கூட்டணி கட்சிகளை கழட்டி விட்டு தனித்து களம் இறங்கி வெற்றிக் கொடி நாட்டியது அ.தி.மு.க. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியோடு எதிர்கொள்வது தான் பாதுகாப்பு என்று கருதி அதற்கு ஏற்ப காய் நகர்த்துகிறது அ.தி.மு.க தலைமை. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு என்கிற கருத்துகணிப்புகளை காலி செய்ய வேண்டும் என்றால் பிரமாண்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சின் திட்டம். இதனை ஓ.பி.எஸ் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

 

பா.ஜ.கவுடன் கூட்டணி என்பது உறுதியாகிவிட்டாலும் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க போன்ற மாநில கட்சிகள் அவசியம் என்று அ.தி.மு.க கருதுகிறது. அந்த வகையில் தே.மு.தி.க.வுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க நிர்வாகிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். தி.மு.க.விடம் இருந்து அழைப்பு வராத நிலையில் தே.மு.தி.க.விற்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.

 

 எனவே தே.மு.தி.க எப்படியும் தங்களுடன் வந்துவிடும் என்கிற தெம்புடன் அ.தி.மு.க பெருந்தலைகள் தங்கள் பார்வையை பா.ம.க பக்கம் திருப்பியுள்ளனர். பா.ம.க.வை பொறுத்தவரை யாருடன் கூட்டணி என்பதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பா.ம.கவிற்கு தி.மு.க கூட்டணியில் இணையவும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் தி.மு.க வெளிப்படையாக பா.ம.க.வை அழைக்காது என்கிறார்கள்.

 

இதனை பயன்படுத்திக் கொண்ட பா.ம.க.வையும் வளைத்துப் போட அ.தி.மு.க நிர்வாகிகள் திட்டம் தீட்டி வருகின்றனர். கடந்த முறையை போல பிரமாண்ட கூட்டணி அமைத்தால் தான் தி.மு.கவை எதிர்கொள்ள முடியும் என்று பா.ம.க தரப்புக்கு அ.தி.மு.க தரப்பு சேதி அனுப்பியுள்ளது. விஜயகாந்த் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாகவும், நீங்களும் வந்துவிட்டால் வட மாவட்டங்களில் தி.மு.க.வை காலி செய்துவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டு வருகிறது. 

ஆனால் பா.ம.க முடிந்த அளவிற்கு பேரம் பேச வேண்டும் என்பதால் அ.தி.மு.க.விற்கு பிடிகொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் எப்படியாவது பா.ம.க.வையும் கூட்டணிக்குள் இழுத்துப் போட்டு தி.முக. கூட்டணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க பெருந்தலைகள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனவே அடுத்து வரும் நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

click me!