17,000 கோடி இழப்பு.. கடனில் தத்தளிக்கும் மின்சார வாரியம்.. ஊழல் தான் காரணம்..போட்டு தாக்கும் ராமதாஸ்..

Published : Feb 06, 2022, 04:22 PM IST
17,000 கோடி இழப்பு.. கடனில் தத்தளிக்கும் மின்சார வாரியம்.. ஊழல் தான் காரணம்..போட்டு தாக்கும் ராமதாஸ்..

சுருக்கம்

மின்சார வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்குக் அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகக் குறைபாடுகளும் தான் காரணம் என்றும் எனவேம் இழப்பை போக்கி, லாபத்தில் இயங்குவது உறுதி செய்யப்படாவிட்டால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று பாமக நிறுவன ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக மின்சார வாரியத்தின் இழப்பு 2020-21ம் ஆண்டில் ரூ.17,000 கோடியாக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத இழப்பு ஆகும். மின்வாரிய இழப்பு ரூ.12,800 கோடி என்ற அளவில் கட்டுப்படுத்தப்படும் என்று உத்தேசிக்கப் பட்டிருந்த நிலையில், அதை விட நான்காயிரம் கோடி கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மின்சார வாரியம் 1990களின் மத்தியில் தொடங்கி, இழப்புகளையே சந்தித்து வருகிறது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் போது மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதும், அடுத்து வரும் ஆண்டுகளில் இழப்பு அதிகரிப்பதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஆனால், எவரும் எதிர்ப்பாராத வகையில், 2020-21ம் ஆண்டுக்கான மின்சார வாரியத்தின் இழப்பு சுமார் ரூ.17,000 கோடி என்ற அளவுக்கு அதிகரித்து விட்டதாக மின்சார வாரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வந்துள்ளன.

2019-20ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.11,964 கோடி ஆகும். 2021-21ம் ஆண்டில் மின் வாரியத்தின் இழப்பு ரூ.12,800 கோடிக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கடந்த ஆண்டில் மின்வாரிய இழப்பு ரூ.17,000 கோடியை தாண்டிவிட்டதாக கணக்குத் தணிக்கையில் தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. வரலாறு காணாத இந்த இழப்பு தமிழக மின்வாரியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டின் இறுதியில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் மின்சார வாரியத்தின் இழப்பு ஓரளவு குறைந்தது. ஆனால், 2017-18ம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.7,760 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2018-19ம் ஆண்டில் ரூ.12,623 கோடியாக அதிகரித்து, 2019-20ம் ஆண்டில் ரூ.11,964 கோடியாக குறைந்த தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு, அதற்கு அடுத்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. நடப்பு 2021-22ம் ஆண்டில் மின்வெட்டை தவிர்க்க தனியாரிடமிருந்து 1500 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் கூடுதலாக வாங்குவதால் இழப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 1.59 லட்சம் கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதன் மொத்த இழப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. அதனால், மின்சார உற்பத்தியாளர்களுக்கு தமிழக மின்சார வாரியம் பல்லாயிரம் கோடி கடன்பாக்கி வைத்துள்ளது. மின்சார வாரியப் பணியாளர்களுக்கு ஊதியம், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.9,000 கோடி தேவைப்படுகிறது. இந்தத் தொகையை திரட்டுவதற்கு முடியாமல் மின்சார வாரியம் தவித்து வரும் நிலையில், அதன் இழப்பு அதிகரித்து வருவது மின்சார வாரியத்தின் அடிப்படை செயல்பாடுகளைக் கூட முடக்கிவிடும் ஆபத்து இருப்பதை அரசு உணர வேண்டும்.

மின்சார வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்குக் காரணம் அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகக் குறைபாடுகளும் தான்.தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 17,000 மெகாவாட் அனல் மின் திட்டங்கள் மற்றும் இயன்ற அளவுக்கு சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்தினால் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். ஆனால், எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரத்தில் இருக்கும் சில தனி மனிதர்கள் லாபம் பார்ப்பதற்காகவே அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. அத்துடன் மின்சார வாரியத்தில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளும் அதன் இழப்பை அதிகரிக்கின்றன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

மின்சார வாரியத்தின் இழப்பை போக்கி, அது லாபத்தில் இயங்குவது உறுதி செய்யப்படாவிட்டால், தமிழகத்தில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். எனவே, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது போன்ற மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் மின் உற்பத்தியை அதிகரிப்பது, நிர்வாக சீர்கேடுகளை களைவது போன்றவற்றின் மூலம் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!