வெட்கமில்லையா... தற்கொலைக்கு சமம்... மாயையான கட்சி... கட்டாய கல்யாணம்...! ராமதாஸை திணறத் திணற வெளுத்துக் கட்டும் எதிர்கட்சிகள்..!

By Vishnu PriyaFirst Published Feb 20, 2019, 2:43 PM IST
Highlights

’கன்னாபின்னாவென கழுவிக் கழுவி ஊற்றுதல்’ எனும் வாக்கியத்துக்கான அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமா?...அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி உறுதியான பிறகு இரண்டு கட்சிகளின் எதிர்கட்சிகளின் வாயிலிருந்து வந்து விழும் வசவுகளை கவனித்தாலே போதும்.

’கன்னாபின்னாவென கழுவிக் கழுவி ஊற்றுதல்’ எனும் வாக்கியத்துக்கான அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமா?...அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி உறுதியான பிறகு இரண்டு கட்சிகளின் எதிர்கட்சிகளின் வாயிலிருந்து வந்து விழும் வசவுகளை கவனித்தாலே போதும். 

இப்படித்தான் இல்லை! எப்படியெப்படி எல்லாமோ போட்டு பொளந்தும், தாளித்தும், வெளுத்தும், வெச்சு செய்தும் தங்களது மிக கடுமையான ஆதங்கத்தை தணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி குறித்து எதிர்கட்சி தலைவர்கள் என்னென்னவெல்லாம் திருவாய் மலர்ந்தருளினார்கள் என்பதை வரிசையாக காண்போம், வா மச்சி!...

ஸ்டாலின்: “சமீபத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழலைப் பற்றி விமர்சனம் செய்து புத்தகமே வெளியிட்டிருந்தார் ராமதாஸ். அந்தப் பெரிய மனிதர்தான் இன்று அ.தி.மு.க. தலைவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகிறார். அவருக்கு வெட்கம், சூடு, சொரணை இல்லையா? மக்களின் பிரச்னைக்காக இவர்கள் சேரவில்லை. சுயநலனுக்காக அமைந்த கூட்டணி இது.” என்று மிக எளிமையாகவும், அடக்கத்துடனும் (!?) விமர்சித்திருக்கிறார். 

திருமாவளவன்: ”எந்த அணியில் பா.ம.க. சேர்ந்தாலும் சரி, அவர்களுக்கு வெற்றி என்பது வாய்க்கவே வாய்க்காது. அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றி என்பது ஒரு வெறும் மாயைதான். 2009-ல் இப்படித்தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தார் ராமதாஸ். நின்ற அத்தனை இடங்களிலும் அக்கட்சி தோற்றது. ஆனால் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. அணி எதிர்த்து நின்று அமோகமாய் வென்றது. அதே வரலாறு இப்போதும் திரும்புகிறது. கவனியுங்கள்.” என்று ஜோஸியம் சொல்லியுள்ளார். 

டி.டி.வி.தினகரன்: ”ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்று தடுத்தவர். அம்மா உயிரோடு இருக்கையிலேயே அவரை ‘சிறை சென்றவர், குற்றவாளி’ என்று விமர்சித்தவர் ராமதாஸ். இப்பேர்ப்பட்டவருடன் அ.தி.மு.க. வைத்துள்ள கூட்டணி என்பது அம்மாவுக்கு செய்த துரோகம். நாற்பது தொகுதிகளிலும் மிக கடுமையான தோல்வியை சந்திக்க இருக்கிறார்கள் இவர்கள். அ.தி.மு.க., பா.ம.க. இருவரும் பி.ஜே.பி.யுடன் இணைவதென்பது தற்கொலைக்கு சமம்.” என்று சபித்துள்ளார்.  

* திருநாவுக்கரசர்: “அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி என்பது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். இவர்களோடு யார் சேர்ந்தாலும் அவர்களும் சேர்ந்துதான் மூழ்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக பா.ம.க, இந்த கூட்டணியில் சேர்ந்திருந்தாலும் அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறாது. சிம்பிளாக சொல்வதென்றால் இவர்களின் கூட்டணி என்பது கட்டயா கல்யாணமே.” ...இப்படி நீள்கிறது. என்னதான் அரசியல் கூட்டணிகள் என்பது சந்தர்ப்பவாத கூட்டணிகள் என்றாலும் கூட...தங்களின் இந்த கூட்டணி பற்றி அளவுக்கு மீறி வசைபாடல்களும், விமர்சனங்களும் வந்து விழுந்து கொண்டே இருப்பதால்  ‘எங்கே தப்பு நடந்துச்சு?’ என்று அதிர்ந்து கிடக்கிறார் அன்புமணி.

click me!