அபராதத்தை வசூலிக்காதது மட்டுமின்றி, அவற்றை எளிய தவணைகளில் செலுத்தலாம் என்று சலுகை காட்டியுள்ளன. மேலும், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை எடுத்துச் செல்வதற்கும் அனுமதி அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்த நிறுவனங்களுக்கு ரூ. 321. 81 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதில் 0. 062 சதவீதம், அதாவது ரூ. 20 லட்சம் மட்டுமே அதிகாரிகள் வசூலித்தனர். மீதமுள்ள அபராதத்தை வசூலிக்காதது மட்டுமின்றி, அவற்றை எளிய தவணைகளில் செலுத்தலாம் என்று சலுகை காட்டியுள்ளன. மேலும், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை எடுத்துச் செல்வதற்கும் அனுமதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்
இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. கிரானைட் கொள்ளை தொடர்பாக 667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கேட்டால் விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது.
அதேபோல, சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை மூடி முத்திரையிட வேண்டும். அவ்வாறு செய்வதற்கு பதிலாக வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை பரிந்துரைத்துள்ளது. ஆனால், வருவாய்த்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது.
ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத் துறையும் செயல்படுகின்றன. எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?