திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில் 125 நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்த உழவர்களில் பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருக்கிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உழவர்கள் 7 பேரும் தேசத்துரோக செயல்களில் ஈடுபடவில்லை. குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான குற்றங்களான கள்ளச்சாராயம் விற்கவில்லை, உணவுப் பொருட்களை கடத்த வில்லை, மணல் கடத்தலில் ஈடுபடவில்லை, பாலியல் குற்றங்களைச் செய்யவில்லை. ஆனாலும் இவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு காரணம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக தங்களின் முப்போகம் விளையும் நிலம் பறிக்கப்படுவதை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தியது தான். மண்ணுரிமைக்காக போராடும் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு தமிழக அரசு கீழிறங்கி சென்றிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மண்ணைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்களை பழிவாங்கும் வகையில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட தமிழக அரசு, கடந்த 3-ஆம் நாள் நள்ளிரவில் வீடு புகுந்து 20 உழவர்களை கைது செய்தது. அதைக் கண்டித்த நான், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்காத தமிழக அரசு, அவர்களில் 5 உழவர்களை மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைகளுக்கு இடமாற்றம் செய்து கொடுமைப்படுத்தியது. அடுத்தக்கட்டமாக அந்த 5 உழவர்கள் உள்ளிட்ட 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது.
கோவையில் ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப்; அதிர்ச்சியில் அலறிய பெண் வாடிக்கையாளர்
மண்ணையும், மக்களையும் காக்க வேண்டியது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை ஆகும். ஆனால், மண்ணைக் காக்கும் கடமையிலிருந்து தவறி விட்ட தமிழக அரசு, அந்தப் பணியில் ஈடுபட்ட உழவர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம். ஆனால், நீதிக்காக போராடும் உழவர்களையே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கிறது என்றால் அந்த அரசு யாருக்காக நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மண்ணுக்கு துரோகம் செய்பவர்களையும், அதற்கு துணை போவோரையும் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதை உணர்ந்து 7 உழவர்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.