நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏக்கள் திடீரென வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடு பிடிக்கும் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதனை முறியடிக்க காங்கிரஸ் கட்சியும் ஒவ்வொரு மாநிலத்திலும் சமரசம் செய்து கொண்டு இடங்களை குறைத்து கொண்டு கூட்டணி அமைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 10 தொகுதிகள் கொடுக்கப்படும் என தெரிகிறது.
undefined
அதிமுக- பாஜக கூட்டணியில் யார்.?
இதே போல பாஜக கூட்டணியில் அதிமுக, பாமக இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலோடு கூட்டணி முறிந்துள்ளது. மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக முயன்றுவரும் நிலையில் அதிமுக பிடி கொடுக்காமல் உள்ளது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தங்கள் அணியை பலப்படுத்த பாமக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதிரடி திருப்பதாக அதிமுக பக்கம் திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவின் நிலைப்பாடும் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ்யை சந்தித்த பாமக எம்எல்ஏக்கள்
இதனிடையே பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு இன்று காலை சென்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், பாமக இரண்டாம் கட்ட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக ஒரு தரப்பினரும். ஆனால் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தை சேந்தவர் என்பதால், அந்த பகுதியில் உள்ள பாமக எம்எல்ஏக்கள் மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக பாமக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்