இதையெல்லாம் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது.. கர்நாடக அமைச்சரால் கடுப்பான ராமதாஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 12, 2021, 6:58 PM IST
Highlights

கர்நாடக உள்துறை அமைச்சரின் பேச்சைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்ற முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாத்திற்கு கேடு விளைக்கும் கர்நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கர்நாடகா அரசின் இந்த செயலை கண்டிக்கும் விதமாகவும், தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் விதமாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் கர்நாடக அரசைக் கண்டித்து 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சரின் பேச்சைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது ஆகும் என குறிப்பிட்டுள்ளார். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு  உள்ளிட்ட எதையும் மதிக்காமல் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக  அமைச்சர் பொம்மை தொடர்ந்து பேசி வருவது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடை உறவு தத்துவத்திற்கு எதிரானது என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகளை மத்திய அரசு  வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 


 

click me!