வன்னியர் சமுதாயத்தை பழி வாங்கத்துடிக்கிறது திமுக... ராமதாஸ் காட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2021, 11:02 AM IST
Highlights

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சமூக அநீதி சக்திகளை துணைக்கு வைத்துக் கொண்டு, வன்னியர்கள் போராடிப் பெற்ற 10.50% இடப்பங்கீட்டை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று திமுக துடித்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சமூக அநீதி சக்திகளை துணைக்கு வைத்துக் கொண்டு, வன்னியர்கள் போராடிப் பெற்ற 10.50% இடப்பங்கீட்டை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று திமுக துடித்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது. அதில்,அம்மா இல்லம் என்ற திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும், சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெகுவிரைவில் தாக்கல் செய்யவிருக்கும் சாதிவாரி மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி மலர்வதற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும், நோக்கமும் ஆகும். இதைத் தான் நான் கடந்த 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை, தமிழகத்தை ஆளும், ஆளப்போகும் அதிமுக அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது தமிழகம் முழுமையான சமூகநீதி வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதையே காட்டுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழகத்தில் மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயமான வன்னியர்களுக்கு தனி இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டத்திற்கான முதல்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளன. பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று அந்த முதல் வெற்றியை வழங்கியது எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தான். வன்னியர்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள இடப்பங்கீட்டின் அளவை மாற்றி அமைத்து, அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும்; அதே போல் அனைத்து சமுதாயங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. அதை அதிமுக ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியாகும்.

தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவுக்கு சமூகநீதி மீதான அக்கறையை விட, வன்னியர் சமூகம் மீதான பகைமை தான் அதிகமாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சமூக அநீதி சக்திகளை துணைக்கு வைத்துக் கொண்டு, வன்னியர்கள் போராடிப் பெற்ற 10.50% இடப்பங்கீட்டை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று திமுக துடித்துக் கொண்டிருக்கிறது. பிற சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்க வேண்டும் என்ற அக்கறை அக்கட்சிக்கு இல்லை. அத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை மலரச் செய்வதற்கு அதிமுக முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி பெற்றுத் தரும் விஷயத்திலும் அதிமுக மிகச்சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரிக்க பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court-ICC) அல்லது புதிய பன்னாட்டு பொறிமுறை (International Impartial Independent Mechanism-IIIM) ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடாகும். அதே நிலைப்பாட்டை, அதிமுகவும் அதன் தேர்தல் அறிக்கையில் 30&ஆவது அம்சமாக சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. அதிமுகவும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதியும் இடம் பெறவில்லை. மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதில் திமுகவுக்கு அக்கறையில்லை; மது ஆலைகளை நடத்தி லாபம் ஈட்டுவதில் தான் அவர்களுக்கு அதிக அக்கறை என்பதை திமுகவின் தேர்தல் அறிக்கையே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வேளாண்மை, நீர் மேலாண்மை, மகளிர் நலன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையை ஒட்டிய நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருப்பதும், ஆக்கப்பூர்வ வாக்குறுதிகளை அளித்திருப்பதும் மக்களின் மனங்களைக் கவரக்கூடியவை. அதிமுகவும், பா.ம.க.வும் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்படும். அனைவரின் ஆதரவையும் ஈர்ப்பதன் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரப்போவது உறுதி”என்று தெரிவித்துள்ளார்.

click me!