இன்றைக்கு ரொம்ப நல்ல நாள்... ஒரே நாளில் முதலமைச்சர், ஸ்டாலின், கமல், வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 15, 2021, 10:52 AM IST
இன்றைக்கு ரொம்ப நல்ல நாள்... ஒரே நாளில் முதலமைச்சர், ஸ்டாலின், கமல், வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல்...!

சுருக்கம்

இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் என பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய கூட்டணியை உறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டன. அரசியல் கட்சி தலைவர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

சட்டமன்ற தேர்தலுக்கான முதற்படியாக வேட்புமனு தாக்கல் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளே போடி தொகுதியில் போட்டியிட தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு அடுத்து இரு தினங்கள் விடுமுறை என்பதால் முதல் நாளில் மட்டும் 70 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் என பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 3வது முறையாக களமிறங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின்னர் அப்பகுதியை ஒட்டியுள்ள நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட உள்ளார். 

அதேபோல் கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக களம் காண உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பகல் 12.30 மணிக்கு  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அயனாவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதன் பின்னர் இன்று முதல் திருவாரூரில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். 

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரும் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான் இன்று  நண்பகல் 12 மணிக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் கோவில்பட்டியில் மதியம் 1.30 மணிக்கும், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் மதியம் 1.45 மணிக்கும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மதியம் 12 மணிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்