விக்கிரவாண்டியில் திமுகவுக்கு பாடம் கற்பித்துவிட்டோம்... வன்னியர்கள் திமுகவை புறக்கணித்துவிட்டார்கள்... குஷியில் பாமக!

By Asianet TamilFirst Published Oct 30, 2019, 7:25 AM IST
Highlights

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இணையாக தங்கள் வேட்பாளர் போட்டியிட்டதுபோல பாமகவும் பணியாற்றியது. இந்தக் கூட்டு முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அதிமுக - பாமக கூட்டணி சேர்ந்து 1,13,766 வாக்குகளை விக்கிரவாண்டியில் அள்ளின. இந்தத் தேர்தல் வெற்றிக்கு தாங்களே காரணம் என்று பாமகவும் கூறிவருகிறது.  
 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்கு பாடம் கற்பித்துவிட்டதாகவும், வன்னியர்கள் திமுகவை புறக்கணித்துவிட்டதாகவும் பாமக தலைவர்கள் பேசிவருகிறார்கள்.
 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததிலிருந்தே டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இதேபோல மு.க. ஸ்டாலினையும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தாக்கி பேசிவருகிறார்கள். இதனால், இரு கட்சிகளின்  தொண்டர்களும் சமூக ஊடகங்களில் அடிக்கடி வார்த்தைப் போர் நடத்துவதையும் காண முடிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, 22 தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி, வேலூர் தேர்தல் வெற்றி என திமுக தொடர்ந்து கெத்து காட்டியது பாமகவுக்கு உறுத்தலாகவே இருந்தது.
திமுகவுக்கு எப்படி பதிலடி தருவது எனக் காத்திருந்த பாமகவுக்கு நல்ல வாய்ப்பாக வந்து சேர்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல். தாங்கள் பலமாக உள்ள தொகுதியில் நடக்கும் இத்தேர்தலில் எப்படியும் திமுகவை வீழ்த்துவது என்று பாமக முனைப்பு காட்டியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர் சமுதாயத்தை முன் வைத்து திமுக - பாமக இடையே வார்த்தைப் போர் மூண்டது. மு.க. ஸ்டாலினும் டாக்டர் ராமதாஸும் அறிக்கை போர் நடத்தினார்கள். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இணையாக தங்கள் வேட்பாளர் போட்டியிட்டதுபோல பாமகவும் பணியாற்றியது. இந்தக் கூட்டு முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அதிமுக - பாமக கூட்டணி சேர்ந்து 1,13,766 வாக்குகளை விக்கிரவாண்டியில் அள்ளின. இந்தத் தேர்தல் வெற்றிக்கு தாங்களே காரணம் என்று பாமகவும் கூறிவருகிறது.  
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, “இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளோம். திமுக வன்னியர் சமுதாயத்தை ஏமாற்ற முயன்றது. 3 கோடி வன்னியர்களுக்கும் ஸ்டாலின்தான் பாதுகாவலர் என்று திமுகவினர் போஸ்டரெல்லாம் அடித்தார்கள். ஆனால், திமுகவை வன்னிய சமுதாயத்தினர் புறக்கணித்துவிட்டார்கள். பிற சமுதாய மக்களும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் இது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு முழுக் காரணம் பாமக தொண்டர்கள்தான்” என்று தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அடைந்த தோல்வியால் பாமக தலைமை முதல் தொண்டர்கள் வரை குஷியில் இருக்கிறார்கள். அந்த குஷியோடு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவும் முடிவு செய்திருக்கிறது பாமக. 

click me!