என்னாது, அதிமுக கூட்டணியை விட்டு போறோமா..? பதறிப் போய் மறுப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ்!

By Asianet TamilFirst Published Aug 26, 2019, 9:45 AM IST
Highlights

அதிமுக கூட்டணியை விட்டு பாமக செல்ல இருப்பதாக வெளியான செய்திக்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலேயே பாமக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற இருப்பதாக வெளியான செய்தியை, ‘இது உண்மை கலப்பற்ற பொய்ச் செய்தி’ என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமக சேர்ந்தது. பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, மாநிலங்களவையில் ஓரிடத்தை வழங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தபோதும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக வெல்வதற்கு பாமகவின் வாக்குகளும் உதவின.


 அதிமுகவில் 3 மாநிலங்களவை இடங்களைப் பிடிக்க கட்சிக்குள் போட்டி இருந்தபோதும், அன்புமணிக்கு மாநிலங்களவையில் ஓரிடத்தை அதிமுக வழங்கியது. இதனால், மகிழ்ச்சியடைந்த பாமக, எதிர்வரும் தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிவந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வட தமிழகத்தில் 40 சதவீத இடங்களை கேட்க முடிவு செய்திருப்பதாகவும், அதில் ஒரு சதவீதம் குறைந்தாலும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.


இந்தச் செய்தியை வெளியான உடனேயே அந்தச் செய்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “ஊடகங்களுக்கு அறம் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஊடக அறம் என்பதன் அடிப்படைகூட அந்த நாளிதழுக்கு இல்லை என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தலில் உடையுது கூட்டணி, தனித்து போட்டியிட தயாராகிறது பா.ம.க. என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி அந்த நாளிதழின் தரத்தைக் காட்டுகிறது.  ஒரு செய்தி வெளியிடும்போது அதில் ஒரு விழுக்காடாவது உண்மை இருக்க வேண்டும். இது உண்மை கலப்பற்ற பொய் செய்தி!” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியை விட்டு பாமக செல்ல இருப்பதாக வெளியான செய்திக்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலேயே பாமக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

click me!