நாகை அருகே இரு பிரிவினரிடையே கடும் மோதல் ! ஜீப்புக்கு தீ வைப்பு ! அம்பேத்கர் சிலை உடைப்பு ! போலீஸ் குவிப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 8:37 AM IST
Highlights

வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது
 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது ஜீப் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த  அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. 

ஜீப்புக்கு தீ வைப்பு, அம்பேத்கர் சிலை உடைப்பு, போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி ஒரே பரபரப்பாக காட்சி அளித்தது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வன்முறையை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. வேதாரண்யம் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதனிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த அகஸ்தியன்பள்ளி கூத்ததேவன்காடு பாபுராஜன் ராஜாளிக்காட்டை சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரு தரப்பு மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வேதாரண்யத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அதிவிரைவு படை மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

வன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், வாய்மேடு, துளசியாப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

click me!