ராமதாசை அவதூறாக பேசுவதா.? தமிழக காங்கிரஸ் கட்சி விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்- எச்சரிக்கும் ஜி.கே.மணி

By Ajmal Khan  |  First Published Nov 21, 2023, 1:00 PM IST

ஒளிரும் பக்கங்கள் குறித்து பாராட்டும் போது அதை ரசிக்கும் காங்கிரஸ் கட்சி, இருண்ட பக்கங்கள் குறித்து விமர்சிக்கும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், அலறுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ள ஜி.கே.மணி, மருத்துவர் அய்யா மீது அவதூறு பேச காங்கிரஸ் முயன்றால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


காங்கிரஸ் - பாமக மோதல்

ஜவஹர்லால் நேரு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்க பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளித்த காகா கலேல்கர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை குறித்த விஷயத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

யாருடைய குரலை ஒலிக்கிறது

சமூகநீதியின் முதலும் தெரியாமல், முடிவும்  தெரியாமல் காங்கிரஸ் செய்துள்ள இந்த செயல் அரைவேக்காட்டுத்தனமானது; கண்டிக்கத்தக்கது.பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்த கலேல்கர் அறிக்கையை ஜவகர்லால் நேரு குப்பையில் வீசியதாக மருத்துவர் அய்யா அவர்கள் உரையாற்றிய சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்ற நாள் அக்டோபர் 26. அதன்பின் 25 நாட்களாக அது குறித்து வாயே திறக்காத காங்கிரஸ் கட்சி,

இப்போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடுமையாக வலியுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால், அக்கட்சி யாருடையாக குரலாக ஒலிக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.

காங்கிரஸ் இருண்ட பக்கங்கள்

2006-ஆம் ஆண்டில் அதிகாரம் படைத்த சில மத்திய அமைச்சர்களின்  எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்களே தலையிட்டு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசிகளுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது,  காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று செல்லுமிடமெல்லாம் இராகுல் காந்தி அவர்கள் உறுதியளித்து வருவது ஆகியவை சமூகநீதி வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் ஒளிரும் பக்கங்கள். ஒளிரும் பக்கங்கள் குறித்து பாராட்டும் போது அதை ரசிக்கும் காங்கிரஸ் கட்சி, இருண்ட பக்கங்கள் குறித்து விமர்சிக்கும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், அலறுவது எந்த வகையில் நியாயம். காங்கிரசுக்கு பக்குவம் வேண்டும்.

குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார்

கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை நேரு அவர்கள் குப்பையில் வீசினார் என்பதற்கு ஆதாரங்கள்  உண்டா? என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அய்யோ, பாவம்... அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. காகா கலேல்கர் தலைமையிலான ஆணையத்தில் மொத்தம்  10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் முதன்மையானவர் சிவ்தயாள்சிங் சவுராசியா.  ஆணையத்தின் அறிக்கையை நேரு அவர்களிடம் தாக்கல் செய்ய கலேல்கருடன் நேரில் சென்றவர் சவுராசியா. ஆணைய அறிக்கையை நேரு குப்பையில் வீசியதை அம்பலப்படுத்தியவர் அவர் தான்.

ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் என்ன நடந்தது? என்பதை சிவ்தயாள்சிங் சவுராசியாவுடன் நெருங்கி பழகியவரும், பெரியாரின் பெருந்தொண்டருமான வே. ஆனைமுத்து அவர்கள் பல்வேறு ஆவணங்களில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்....
‘‘கலேல்கர் தனது அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுத்தார். அந்த அறிக்கையை நேரு தன் கையில் வாங்கியவுடனே ஒரு கேள்வி கேட்டார் கலேல்கரிடம்: ‘‘ நீங்கள் இந்த அறிக்கையில் ஏழை பிராமணர் வகுப்பு எதையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்கிறீர்களா? என்பது தான் அந்த கேள்வி.

கலேல்கர் யோக்கியமான பிராமணர். அதனால், நேருவிடம், ‘‘இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம். அதனால் பிராமணர்களை சேர்க்கவில்லை. அது இந்த ஆணையத்தின் பணி வரம்புக்குள் வரவில்லை’’ கலேல்கர் கூறினார். இல்லை என்று கலேல்கர் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரதமர் நேரு அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை

மேற்கண்ட தரவுகள் எல்லாம் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய ‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’ என்ற தலைப்பிலான நூலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதையெல்லாம் படித்து, சமூகநீதி வரலாற்றை  புரிந்து கொள்ளாமலேயே, யாருடைய ஏவலுக்கோ பணிந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக காங்கிரஸ் மீது கோபம் வரவில்லை... பரிதாபம் தான் ஏற்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் வாதப்படியே, கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை அந்நாளைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவமதிக்கவில்லை என்றால், அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 40% வரையிலும்,  கல்வியில் 70% வரையிலும் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாமே? அதை ஏன் நேரு செய்யவில்லை?

 மண்டல் ஆணையத்தின் அறிக்கை குறித்து இராஜிவ் காந்தி அவர்கள் கூறிய கருத்துகள் என சமூகநீதி வரலாற்றில் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. அவை குறித்தெல்லாம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வகுப்பெடுக்க பா.ம.க. தயாராகவே உள்ளது; கற்றுக் கொள்ள தயாரா? என காங்கிரஸ் விளக்க வேண்டும். அதை விடுத்து தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூகநீதிக்காக போராடி வரும் மருத்துவர் அய்யா மீது அவதூறு பேச காங்கிரஸ் முயன்றால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 
 

இதையும் படியுங்கள்

PMK vs Congress : ராமதாசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய தமிழக காங்கிரஸ்- என்ன காரணம் தெரியுமா.?

click me!