பரஸ்பரம் தாக்கிக்கொண்ட பாஜக-பாமக தொண்டர்கள்!! பேருந்து கண்ணாடி உடைப்பு.. சென்னையில் பரபரப்பு

First Published Jun 25, 2018, 2:39 PM IST
Highlights
pmk bjp followers clash in chennai t nagar


சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாமக தொண்டர்களுக்கும் அதை தடுக்க முயன்ற பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. 

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையவுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. 

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய யார் காரணம் என்பது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை ஆகிய இருவருக்கும் இடையே டுவிட்டரில் கடும் கருத்து மோதல் வெடித்தது. 

அன்புமணிக்கு தமிழிசை இட்ட பதில் பதிவுகள் ஒன்றில், ராமதாஸை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகம் கமலாலயத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். 

ராமதாஸ் குறித்து அவதூறாக பேசிய தமிழிசை, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர், கமலாலயத்தை முற்றுகையிட சென்றனர். பாமக தொண்டர்கள் திரளாக வருவதை அறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்தனர். பாமகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தடுக்க முயன்றனர். 

அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பாஜக-பாமக தொண்டர்கள் பரஸ்பரம் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, 100க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தி.நகர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
 

click me!