பா.ம.க – அ.தி.மு.க கூட்டணிக்கு சிக்கலாக இருக்கும் ஒரே ஒரு தொகுதி..!

By Selva KathirFirst Published Feb 7, 2019, 9:36 AM IST
Highlights

அ.தி.மு.க மற்றும் தி.மு.க என இரண்டு கட்சிகளுமே 4 தொகுதிகள் தான பா.ம.க.வுக்கு என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இறுதி நேரத்தில் கூடுதலாக ஒரு தொகுதியை கொடுத்து பா.ம.க.வை கொத்திக் கொண்டு செல்லப்போவது தி.மு.கவா – அ.தி.மு.கவா என்று பட்டிமன்றமே சென்னையில் அரசியல் நோக்கர்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பா.ம.க – அ.தி.மு.க கூட்டணியை இறுதி செய்வதில் ஒரே ஒரு தொகுதி தான் பிரச்சனையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு தொகுதிகள் வரை தர வாய்ப்புள்ளதாக கூறியே கே.பி.முனுசாமி, அன்புமணியிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார். ஆறு தொகுதி என்றால் பேசலாமே என்று கருதி தான் பா.ம.க.வும் அ.தி.மு.கவுடன் பேச ஆரம்பித்தது. ஆனால் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கும் போதே 4 தொகுதிகளுக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க தரப்பு பா.ம.க.விடம் கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பா.ம.க.வின் தலைமை பொறுப்பில் இருப்பவரே கடிந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள். 

ஆறு தொகுதி என்று கூறியதால் தான் பேச்சுவார்த்தைக்கு வந்தோம், திடீரென 4 தொகுதியாக குறைத்தது எப்படி நியாயம்? என்று பா.ம.க தரப்பு கே.பி.முனுசாமி தரப்பிடம் பொங்கியதாக சொல்கிறார்கள். அதற்கு தி.மு.கவுடனும் பேசுகிறீர்கள், எங்களுடனும் பேசுகிறீர்கள், தி.மு.க உங்களுக்கு 4 தொகுதிகள் தர முன்வந்த விவகாரம் உளவுத்துறை மூலம் எடப்பாடிக்கு தெரிந்துவிட்டது. எனவே எடப்பாடி பா.ம.க.விற்கு 4க்கு மேல் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாக பதில் அளித்துள்ளனர். 

இதனால் கடுப்பான பா.ம.க தரப்பு மேலும் ஒரு தொகுதி என 5 தொகுதியை பைனல் செய்யுமாறு கூறியதாகவும் அது தொடர்பான பேச்சு இழுபறியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதே சமயத்தில் தி.மு.கவுடன் ராமதாசுக்கு நெருக்கமான ஒரு நபர் ஐந்து தொகுதிகள் தந்தால் வரத் தயார் என்று பேசி வருவதாக கூறப்படுகிறது. அதாவது அன்புமணி தரப்பு அ.தி.மு.கவுடனும், ராமதாஸ் தரப்பு தி.மு.கவுடனும் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். 

அ.தி.மு.க மற்றும் தி.மு.க என இரண்டு கட்சிகளுமே 4 தொகுதிகள் தான பா.ம.க.வுக்கு என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இறுதி நேரத்தில் கூடுதலாக ஒரு தொகுதியை கொடுத்து பா.ம.க.வை கொத்திக் கொண்டு செல்லப்போவது தி.மு.கவா – அ.தி.மு.கவா என்று பட்டிமன்றமே சென்னையில் அரசியல் நோக்கர்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

click me!