
குஜராத் சட்டசபைத் தேர்தல் என்பது, மாநிலத்தின் வளர்ச்சி அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் போட்டியாகும். இறுதியில் குடும்ப ஆட்சியை முறியடித்து, வளர்ச்சியை முன்னிறுத்தும் அரசியல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பிரதமர் மோடி நேற்று பேசினார்.
குஜராத் மாநிலத்தில், கடந்த 15 நாட்களாக ‘குஜராத் கவுரவ மகா சம்மேளன்’ எனும் யாத்திரை நடந்து வந்தது. காந்திநகரில் நேற்று நடந்த இறுதிநாளான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-
குஜராத் சட்டசபைத் தேர்தல் என்பது வாரிசு அரசியலுக்கும், வளர்ச்சியை முன்னிறுத்தும் அ ரசியலுக்கும் இடையிலான போட்டியாகும். இந்த போட்டியில் குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் தோற்பார்கள், வளர்ச்சியை முன்நிறுத்தும் அரசியல் வெற்றி பெறும்.
குஜராத்தின் வளர்ச்சியை எதிர்மறையான கோணத்திலே காங்கிரஸ் கட்சி எப்போதும் அனுகுகிறது. மக்களை மனதை குழப்புதற்கு பதிலாக வளர்ச்சியை அடிப்படையில் காங்கிரஸ் அனுகுமா?. காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டு இருந்தால், அந்த கட்சியைச் சேர்ந்த 25 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் ஏன் தேர்தலுக்கு முன்பே கட்சியை விட்டு விலகுகிறார்கள் என்பது தெரிய வேண்டும்.
குஜராத் மக்களைப் பார்த்து காங்கிரஸ் கட்சி பொறாமைப்படுகிறது. அந்த கட்சி எப்போதுமே மாநிலத்தை முள்ளைப் போன்றே பார்க்கிறது. சர்தார் படேலுக்கும், மொரார்ஜி தேசாய்க்கும் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பது வரலாற்றில் தெரிந்து விடும்.
காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த கட்சி, அது இப்போது ஜாமீனில் வந்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி( ஜி.எஸ்.டி.) குறித்து எங்களை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி குறித்து முடிவுகள் எடுத்ததில், காங்கிரஸ் கட்சிக்கு சரிபாதி பங்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது என்பதை நண்பர்களுக்கு சொல்லிவிடுகிறேன். ஆதலால், அந்த கட்சியினர் பொய்களை மக்கள் மத்தியில் பரப்பக்கூடாது. ஜி.எஸ்.டி. வரியில் இருக்கும் குறைபாடுகள் அனைத்தும் இந்த அரசால் களையப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.