சோத்துக்கு வழியில்லா நாட்டில் ஆயிரங்கோடிகளில் அரசியல் சிலைகள்... எங்கே போகுது என் இந்தியா?

By vinoth kumarFirst Published Dec 17, 2018, 1:48 PM IST
Highlights

தன் உதவியாளரின் திருமணத்துக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில்தான் வந்தார் ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு தனி விமானத்தில்தான் வந்து சென்றனர் சோனியாவும், ராகுலும். பிரதமர் மோடியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் அவர் பாத்ரூமிலிருந்து பக்கத்து ரூமுக்கே தனி ஃப்ளைட்டில்தான் செல்லக்கூடியவர். 

நம் தேசத்தின் அரசியல் தலைவர்கள் சைக்கிளை விட மோசமாக பொது விமான சேவையை பயன்படுத்தி வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் தனி விமானத்தில் செல்வதுதான் அரசியல் தலைவர்களுக்கு கெத்து. தன் உதவியாளரின் திருமணத்துக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில்தான் வந்தார் ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு தனி விமானத்தில்தான் வந்து சென்றனர் சோனியாவும், ராகுலும். பிரதமர் மோடியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் அவர் பாத்ரூமிலிருந்து பக்கத்து ரூமுக்கே தனி ஃப்ளைட்டில்தான் செல்லக்கூடியவர். 

அரசியல் தலைவர்களின் தனி விமான கெத்து இப்படி இருக்கும் இதே தேசத்தில்தான் அடுத்த வேலை சோறு நிரந்தரமில்லாத நிலையில் பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். ஊட்டச்சத்தான உணவு கிடைக்காத குறையினால் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி உட்பட தேசத்தின் பல இடங்களில்  இன்னமும் சிசு மரணம் தொடர்கிறது. 

ஆளும் ராசாக்களுக்கும் இது பற்றி கவலையில்லை, ஆண்ட மற்றும் மீண்டும் ஆள துடிக்கும் ராசாக்களுக்கு இது பற்றி அக்கறையிருந்ததில்லை. அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு அழைப்பிதழ் வந்தததையே பிறவிப்பயனாக நினைத்து குதூகழிக்கும் இவர்கள், ஒருவேளை சோத்துக்கில்லா சிவிலியனை பற்றி எந்த நொடியிலும் சிந்திக்க தயாரில்லை. சூழல் இப்படி போய்க் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பல கட்சி தலைவர்களை போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது ‘சிலை மேனியா’. அதாவது தங்களின் அரசியல் பலத்தை காட்டுவதற்காகவும், குறிப்பிட்ட ஒரு மெகா வாக்கு வங்கியை தன் பக்கம் ஈர்ப்பதற்காகவும், தன் பெயர் காலத்துக்கும் மங்காமல் நின்றிட வேண்டியும் மறைந்த முக்கிய தலைவர்களுக்கு மெகாவையும் தாண்டி அகா ஜுகா சைஸில் சிலை வைக்கும் பழக்கம் நம் நாட்டின் அரசியல் தலைவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. 

அன்று பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி உ.பி.யில் யானை சிலைகளை அமைத்ததற்கு கழுவிக் கழுவி ஊற்றியவர்கள் இன்று அதே தப்பை தாங்களே செய்கிறார்கள். வல்லபாய் படேலின் அதிரூப சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்து ‘இது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட பெரிது.’ என்று பெருமை பேசினார் பிரதமர் மோடி. இந்த தேசத்தை  பிற்போக்கு பழந்தன்மைகளில் இருந்து மீட்டு, ஹைடெக்காக மாற்றுவேன் என்று தேர்தலின் போது வீராவேசம் பேசியவர் இப்படியொரு சிலை அரசியலை செய்தபோது உலகமே திட்டியது. 

அதேபோல் ஆந்திராவின் தலைநகர் அமராவதியை உலகமே வியந்து பார்க்கும் ஹைடெக் சிட்டியாக மாற்றும் முனைப்பில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நீறுகொண்டா குன்றின் மீது நானூற்று ஆறு கோடி ரூபாய் செலவில் மறைந்த முதல்வர் என்.டி.ராமராவ்-க்கு சிலை அமைக்க இருக்கிறார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். போலவே, ஆந்திராவில் என்.டி.ஆர். எனும் பெயருக்காகவே லட்சக்கணக்கில் ஓட்டுகள் விழும். அதை சிந்தாமல், சிதறாமல் அள்ளத்தான் இந்த திட்டம். மோடியும், நாயுடுவும் மட்டுமா இப்படி சிலை சென்டிமெண்டில் கரைகிறார்கள்? பகுத்தறிவு பகலவன் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வை வைத்து மாபெரும் அரசியல் செய்திருக்கிறார் ஸ்டாலின்.  

ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கிறேன் பேர்வழி என்று, ஏதோ ஒரு முகத்துடன் கூடிய சிலையை வைத்து அ.தி.மு.க. தொண்டர்களிடம் தாறுமாறாக வாங்கிக் கட்டியது எடப்பாடி டீம். சமீபத்தில் புதிய சிலை திறந்தபோதும் அதை வேட்டியால் மூடி வைத்து, தொண்டர்களிடம் திட்டு வாங்கியது. ஆக இந்த தேசம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளை புதிதாக இந்த ‘சிலை ராசி’ போட்டு ஆட்டுகிறது.

தமிழக அரசியல்வாதிகளை போல் ஆளுயர சிலையை செய்து அரசியல் பண்ணினாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வானுயர சிலை செய்து அதற்காக பல ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டுவதென்பது அதிகார துஷ்பிரயோகமின்றி வேறேது? உயிரற்ற சிலைக்காக அள்ளிவிடப்படும் பல ஆயிரம் கோடிகளை சோத்துக்கு வழியில்லாத ஜனங்களுக்கு கொட்டினால், பல லட்சம் குடும்பங்கள் பிழைத்துக் கொள்ளும். யோசியுங்கள் தலைவர்களே.

click me!