
குஜராத் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பிரசாரத்தின் போது, குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் கை இருப்பதாகக் கூறினார். மேலும், பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன் கலந்து கொண்ட ரகசிய கூட்டம் தில்லியில் நடத்தப்பட்டதாகக் கூறினார் மோடி. இதனால், இரு தரப்புக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அடுத்து, மோடி செய்த சாதனைகள் என்று இரண்டைக் கூறலாம் என்று கூறும் சமூக ஊடகவியலாளர்கள், முதலாவது, வாய்பேசாமல் மௌனமாக இருந்த மன்மோகன்சிங்கின் வாய் திறக்க வைத்த சாதனை, ராகுல் காந்தியை கோயில் கோயிலாக சுற்ற வைத்த சாதனை இவற்றைச் செய்துள்ளார் மோடி என்று கேலி செய்தனர்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தப் பட்டதன் நினைவு தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதில், பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் இதில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியைப் பார்த்து கைகுலுக்கிக் கொண்டார்.
கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது லஷ்கர் ஈ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் பயங்கரவாதிகள், 7 பேர் பாதுகாப்பு படையினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அப்போது, நாடாளுமன்றத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தியை உடனே தொலைபேசியில் அழைத்து, அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்று நலம் விசாரித்தார்.
ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப் படும் நாடாளுமன்றத்தில், பிரிவினைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்திய மோசமான அந்தத் தாக்குதல், இந்தியர்களின் மனத்தில் ஆறாத ரணமாக மாறிப் போனது. அந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதன் 16ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவிட’த்தில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கல் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்ற பிரதமர் மோடி, அவரிடம் அந்நாள் நினைவுகளையும் பேசிக் கொண்டிருந்தாராம்.