
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயக்த்தின் மக்கள் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன், பாஜக , நாம் தமிழர் கட்சி என போட்டி பலமாக உள்ளது.
இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் மதுசூதனன் உற்சாகமாக களமிறங்கி உள்ளார். இதே போன்று திமுக வேட்பாளர் மருது கணேசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கட்சி, சின்னம் என அனைத்தையும் இழந்த அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரனும், இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். கடந்த தேர்தலின் போது தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட அவர் தற்போது குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வாக்காளர்களின் அதிக ஆதரவுடன் முதலிடத்தில் இருப்பதாக மக்கள் ஆய்வு இயக்குனர் பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜநாயகம், ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டார். கடந்த 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 156 தெருக்களில் 3120 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அறிக்கையில் யாருமே எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அனைவரையும் அடித்துத் தள்ளிவிட்டு முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டபடியே தேர்தல் நடந்திருந்தால் பெரும்பான்மையான வாக்காளர்களின் ஆதரவு டி.டி.வி.தினகரனுக்கு சென்று இருக்கும் என ராஜநாயகம் தெரிவித்தார்.
தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் பிரஷர் குக்கர் சின்னம் 91.6 சதவீத வாக்காளர்களை சென்றடைந்திருப்பதாக குறிப்பிட்டார். அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் 81.1 சதவீதம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்..
பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழ தொகுதி முழுவதும் சென்றடைந்துள்ளதாக ராஜநாயகம் தெரிவித்தார்.
அறிவாற்றல், துணிச்சல், நிர்வாக திறன், துடிப்பான செயல்பாடு, ஊடகச் சிறப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை ஆகிய மதிப்பீட்டில் டி.டி.வி.தினகரன் முன்னிலை வகிப்பதாகவும் , அதிமு ஆட்சி மோசம் என 73.3 சதவீதமும், சிறப்பு என 4.5 சதவீதமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என 22.1 சதவீதம் என வாக்காளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல் மத்தியில் பா.ஜ.க.வின் ஆட்சி , மோசம் என 85.6 சதவீதம் வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் ராஜநாயகம் கூறினார்.
ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் டி.டி.வி.தினகரனுக்கு 35.5 சதவீதமும், மருது கணேஷ்க்கு 28.5 சதவீதமும், மதுசூதன்னுக்கு 21.3 சதவீதமும், பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதமும் தான் வாக்களிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அதேப் போல் முழு நேர அரசியலுக்கு வந்தால் நடிகர் விஷாலுக்கு 15.2 சதவீதமும், விஜய்க்கு 11.3 சதவீதமும், கமலுக்கு 10.7 சதவீதமும், ரஜினிக்கு 5.1 சதவீதமும் தான் ஆதரவி கிடைத்திருப்பதாக ராஜநாயகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..