பதவி ஏற்பு விழா..! ஸ்டாலினை அழைக்கவில்லையா மோடி..? டி.ஆர்.பாலு பேட்டியால் குழப்பம்..!

By Selva KathirFirst Published May 29, 2019, 11:29 AM IST
Highlights

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவ்வாறு ஒரு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவ்வாறு ஒரு அழைப்பு வரவில்லை என்று டிஆர் பாலு கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 30 ஆம் தேதி நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மையம் தலைவர் கமல் உள்ளிட்டோருக்கு மோடி பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

 

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் விழாவில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் செல்லா விட்டாலும் அவரது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செல்வார் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து டி.ஆர்.பாலுவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தற்போது வரை பதவி ஏற்பு விழாவிற்கு தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறி விட்டு சென்றார். 

இதுகுறித்து பாஜக தரப்பிடம் கேட்டபோது தான் உண்மை தெரியவந்தது. திமுக தலைவர் என்கிற முறையில் அல்லாமல் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தான் ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாகவும் அந்த அழைப்பிதழ் சட்டப்பேரவையில் உள்ள ஸ்டாலின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக தரப்பு தெரிவிக்கிறது.

இதனால் ஏற்பட்ட தகவல் தொடர்பு குழப்பத்தால் அழைப்பிதழ் வரவில்லை என்று திமுக தரப்பு கூறியிருக்கலாம் என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இருந்தாலும் கூட ரஜினி கமலுக்கு அழைப்பிதழ் சென்றுவிட்ட நிலையில் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் சொல்லாதது அரசியல் நாகரீகம் இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

click me!