பிரதமருடன் 25 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய மு.க.ஸ்டாலின்... தமிழகத்திற்காக வைத்த கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 17, 2021, 06:34 PM IST
பிரதமருடன்  25 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய மு.க.ஸ்டாலின்... தமிழகத்திற்காக வைத்த கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?

சுருக்கம்

மகிழ்ச்சியான, மனநிறைவுடன் சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.   

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு முதன்முறையாக இன்று  காலை டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். சிறப்பு விமானம் மூலமாக டெல்லி சென்ற அவர், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். டெல்லி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக., எம்.பி.க்களும், நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

அதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய மு.க.ஸ்டாலின், டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நீட் தேர்வு ரத்து, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, 7 பேர் விடுதலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை,மேகதாது அணை விவகாரம் ஆகியன குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: கொரோனா பெருந்தோற்று காரணமாக பதவியேற்ற உடனே பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. தற்போது இந்திய அளவில் தொற்றுக் குறைந்துள்ளதால், பிரதமரிடத்தில் நேரம் கேட்டேன். தற்போது மகிழ்ச்சியான, மனநிறைவுடன் சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். 

தமிழகத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், செங்கல்பட்டு, ஊட்டி தடுப்பூசி நிறுவனங்களை செயல்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரி பாக்கித் தொகையை முழுமையாக வழங்க வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும், காவிரி நீருக்கு தடையாக இருக்க கூடிய மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும், கோதாவரி - காவிரி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும், கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு, புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வியை உறுதிபடுத்த வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் 2ம் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!